நன்றி - Safwan Basheer
நான் கச்சேரியில் வேலை செய்வதனால் என்னிடம் அதிகமானவர்கள் உதவி, அல்லது சந்தேகம் கேட்பது பிறப்புச்சான்றிதழ் பெறுவது குறித்துதான். ஒரு குழந்தை பிறந்தால் முதலில் அந்தக் குழந்தையின் பிறப்பை வைத்தியசாலையில் இருக்கும் ரெஜீஸ்டார் பிரிவில் பதிவு செய்ய
வேண்டும்.
அவர்கள் ஒரு வாரத்திற்குள் உங்களது குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி ஒன்றைத் தருவார்கள். ஆனால் வைத்தியசாலையின் ரெஜிஸ்டார் பிரிவில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ், குறித்த வைத்தியசாலையில் உங்கள் குழந்தையின் பிறப்பை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமே தவிரஅதை ஒரு original birth certificate ஆக பயன்படுத்த முடியாது.
இலங்கையில் ஒரு original birth certificate ஐ பெறுவதென்றால் பிறப்பு நிகழ்த வைத்தியசாலை அமைந்திருக்கும் பிரதேச செயலகத்தில் மட்டுமே பெறமுடியும்.
ஒரு குழந்தை பிறந்து வைத்தியாசாலை ரெஜீஸ்டார் பிரிவில் பதிவு செய்ததன் பின்னர் ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குள் உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை உங்கள் குழந்தை பிறந்த வைத்திய சாலை அமைந்திருக்கும் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்புச் சான்றிதழில் பெயர், பிறந்த திகதி, தந்தையின் பெயர், தாயின் பெயர் இவை எவற்றிலேனும் மாற்றங்கள், அல்லது பிழைகள் இருந்தால் எப்படி அவற்றை சரி செய்து கொள்வது..??
எமது பிறப்புச் சான்றிதிழில் பிறந்த திகதி அல்லது பெற்றோரின் பெயரில் அல்லது பெற்றோரின் பிறந்த திகதி மாதிரியான விடயங்களில் ஏதும் மாற்றங்கள் இருந்தால், அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக
மகனின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பிறந்த திகதி பிழையாக பதியப்பட்டுள்ளது என்றால் தந்தையின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதியுடன் தந்தையின் சரியான பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒரு பிறப்புச் சான்றிதழில் பெயரில் அல்லது ஒரு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அந்த பெயர்மாற்றம் குறித்து ஒரு தேசிய பத்திரிகையில் ஏதாவது ஒரு மொழியில் ஒரு விளம்பரம் பிரசுரிக்கப்பட வேண்டும். அத்தோடு மாற்றப்பட வேண்டிய புதிய பெயர் பயன்பாட்டில் இருப்பதற்கான சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணமாக
மாற்றப்பட வேண்டிய பெயரில் திறக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கின் புத்தகம்.
மாற்றப்பட வேண்டிய பெயருடன் கிராமசேவகரினால் வழங்கப்படும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ். சாமதான நீதாவான் அல்லது சட்டத்தரணி ஒருவரால் வழங்கப்படும் புதிய பெயர்குறித்த ஒரு உறுதிப்படுத்தல் கடிதம். பிழையான அல்லது மாற்றப்படாத பெயறுடன் இருக்கும் பிறப்புச்சான்றிதழின் மூலப்பிரதி. பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் பிரதி. பெயர்மாற்றம் செய்வதற்கான ஒரு வேண்டுகோள் கடிதம்.
18 வயதுக்கு குறைந்த ஒருவரின் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தாய் தந்தை இருவரும் பிரதேச செயலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு தமது சம்மதத்தை வழங்க வேண்டும்.
தாய் தந்தை யாராவது வெளிநாட்டில் இருந்தால் தனது பிள்ளையின் பெயர்மாற்றத்துக்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதம் ஒன்று அவர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒருவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து அந்தக்குழந்தையின் பெயரில் மாற்றம் செய்யவேண்டும் என்றால் அவர் முதலில் அந்த குழந்தையை சட்டபூர்வமாக தத்தெடுத்ததற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதற்குப்பின்னர் நான் மேலே சொன்ன ஒரு பெயர்மாற்றம் செய்வதற்கு தேவையான அவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு குழந்தை பிறந்தாலும் அந்த வைத்தியசாலை அமைந்திருக்கும் பிரதேச செயலகத்திலேயே பிறப்புச் சான்றிதழைப் பெறவேண்டும். அத்தோடு 1940 களுக்கு முன்னர் அதிகமான
பிரசவங்கள் வீடுகளிலேயே நிகழ்ந்துள்ளன. அவ்வாறான வீடுகளில் பிரசவிக்கப்பட்டவர்களின் பிறப்புச் சான்றிதழ்களும் குறித்த பிரசவம் நிகழ்ந்த
வீடு அமைந்துள்ள பிரதேச செயலகப்பிரிவிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இலங்கையைப் பொருத்தவரையில் தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் பிறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களின் அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்படுகின்றன.
எனவே பிறப்புச் சான்றிதழில் உள்ள தகழ்வல்கள் அனைத்தும் மிகச்சரியாக இருக்க வேண்டும். எமது பிறப்புச் சான்றிதழில் எம்மால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் ஒரு பிழை எமது பிள்ளைகளுக்கு, பிள்ளைகளின பிள்ளைகளுக்கு கூட எதிர்காலத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.