Ads Area

அல்லாஹ்வுக்கு காது நன்றாக கேட்கும் நோன்பு காலத்தில் ஸ்பீக்கரில் வணக்கம் செய்யத் தேவையில்லை.

மஸிஹுதீன் இனமுல்லாஹ்-
இன்று நாடு முழுவதிலும் மூலை முடுக்குகளிலும் ஜும்மாப் பள்ளிவாயல்கள், தக்கியாக்கள், தர்ஹாக்கள் என சகல மத வழி பாட்டுத்தலங்களிலும் ஒலி பெருக்கி அத்தியாவசிய சாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்த விடயமே. ஆனால் முஸ்லிம்கள் இந்த சாதனத்தை எந்த வரைமுறைகளும் கட்டுக்கோப்புக்களுமின்றி உபயோகிக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
உலகிற்கு விஞ்ஞானத்தையும் நாகரீகத்தையும் இஸ்லாம் போதித்ததென  பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் மிகவும் பாமரத்தனமாகவும், அநாகரீகமாகவும் பல்வேறு விடயங்களில் மார்க்கத்தின் பெயரால் நடந்து கொள்கின்றோம், அவற்றுள் இந்த ஒலி பெருக்கி துஷ்பிரயோகமும் ஒன்றாகும்.
அதிகரித்து வரும் பள்ளிவாயல்கள் குறித்து அச்சம் கொண்டுள்ள பெரும்பான்மை சமூகம் மஸ்ஜிதுகளோடு முழங்கும் ஒலிபெருக்கிகளின் அதிர்வலைகளை ஆக்கிரமிப்பு மனப்பான்மையின் அடையாளங்களாக பார்ப்பதனால் அவர்களும் அந்திசந்திகளில் எல்லாம் சிலைவைத்து ஒலிபெருக்கிகளை போடுவதற்கு நாங்கள்தான் பிரதான  காரணமாக இருந்திருக்கின்றோம், இப்பொழுது ஒலிபெருக்கித் துஷ்பிரயோகம் எமது இருப்புக்கே அச்சுறுத்தலாக வந்துள்ள போதும் நாம் திருந்தவே தயாரில்லை என்பதனை நிரூபித்துக்கொண்டும்  இருக்கின்றோம்.
ஒலி அலைகளின் திர்வுகளை அளவீடு செய்ய “டெசிபல்” அளவீடுகள் உள்ளன, அந்த வகையில் ஒரு பள்ளிவாயளுக்கு அதான் சொல்ல மட்டும் சுமார் 110 டெசிபல் முதல் 120  டெசிபல் அளவு போதுமானது , 15 முதல் 35 வாட் வரையிலான மின்சார சக்தி தேவைப்பாடு உடைய டெசிபல் அளவு சப்தம் ஓசை போதுமானது.  100 வாட் சக்திக்கு மேற்பட்ட அம்ப்ளிபயர்களை பள்ளிவாயல்களில் பாவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
“எந்த வொரு சாதனமும் தேவைக்காக தேவைக்கு ஏற்ப  மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்பது பகுத்தறிவுள்ள எவருக்கும் புரியக் கூடிய அடிப்படை உண்மையாதலால் அதனை விளங்கிக் கொள்ளவோ விளங்கப்படுத்தவோ படிப்பறிவு ஒன்றும் அவசியமான விடயமல்ல என்றாலும் ஞாபகமூட்டலுக்காக நாம் சில விஷயங்களை கவனத்திற்கு எடுப்பது சிறந்ததென கருதுகின்றேன்.
தேவைக்கு அதிகமாக குரலை ஒலியை ஓசையை உயர்த்தக் கூடாது என்பதே அல்-குர்ஆனும் சுன்னாஹ்வும் நமக்கு போதித்துள்ள தர்மமாகும். நாங்கள் தேவைக்காக ஒலி பெருக்கிகளை பயன் படுத்துவதாயின் “அதான்” சொல்லுவதற்காகவும் ஏதேனும் அறிவிப்புகளை செய்வதற்காகவுமே அவற்றை உபயோகிக்க வேண்டும். அல்லது மிகவும் அத்தியாவசியம் என கருதப் படுகின்ற ஒரு நிகழ்வின் போதும் பயன்படுத்தலாம்.
அவ்வாறு  அவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தும் நாம் தேவைப்படுகின்ற அளவுக்கு (அவசியப்படுகின்ற அளவுக்கு) மாத்திரமே அவற்றின் சப்தத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே உயரிய பண்பாடும் இஸ்லாமிய வழி முறையுமாகும்.
உதாரணமாக இன்று ஒவ்வொரு மகல்லாவிலும்  ஒரு பள்ளிவாயல் காணப்படுவதால் அந்தந்த மகால்லாவிற்குள் மாத்திரம் கேட்கின்ற அளவு சப்தத்தை நாம் கட்டுப்படுத்திக்கொள்ள கற்றுக் கொள்ளவேண்டும். மாறாக இருக்கின்ற இடத்திலிருந்து ஐந்து மகல்லாக்களிற்கோ ஐந்து சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கோ கேட்குமளவு சப்தத்தை முழு அளவில்  முடுக்கிவிடுவது எமது முழு சமூகத்தினதும் முழுமையான ஜாஹிளிய்யத்தை வெளிக் கொணரும் செயலாகும்.
நாங்கள் முழுவதும் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களாக இருந்தாலும் அல்லது மாற்று மதத்தவருடன் கலந்து வாழும் பிரதேசங்களாக இருந்தாலும் இந்த அடிப்படை நாகரீகத்தை கடைப் பிடிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த சமூகங்கள் மத்தியில் வாழும்  நாம் பல்வேறு கோணங்களில் இந்த விவகாரத்தை கையாளவேண்டும்.
பாங்கு -அதான்- சுமார் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் போதுமாயிருக்க அதற்கு முன்னால் நீண்ட சலவாத்துகளுக்காகவும் பின்னர் இகாமத்து சொல்வதற்காகவும் ஒலி பெருக்கிகளை நாம் உபயோகிக்க வேண்டிய அவசியமே கிடையாது. சில இடங்களில் தொழுகைகளைக்  கூட ஒலி பெருக்கியில் நடாத்துவது விசனத்துக்குரிய  விடயமாகும்.
அதேபோன்று,  ஜும்மா குத்பாக்களையோ வேறு ஏதும் பயான்களையோ எல்லா இடங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒலி பெருக்கியில் நிகழ்த்துவதும் பொருத்தமற்ற ஒரு விடயமாகும், வீட்டில் உள்ள பெண்கள் குத்பாக்களை கேட்க வேண்டும் என்பதற்காக இன்று நேரடி குத்பாக்கள் ஒலிபரப்புச் செய்யப் படுகின்றன என்பதனை முஸ்லிம்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இன்று நமது சமூகத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை மைய்யமாக் கொண்டு பள்ளிவாயல்கள் அருகருகாமையில் இருப்பதுவும், அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒலி பெருக்கிகளில் உயர்ந்த தொணியில் குத்பாக்களையும் பயான்களையும் முழக்குவதோ மாற்று மதத்தவர்கள் எவ்வாறு இருப்பினும் அண்டை அயலவர்களை அல்லோல கல்லோலப் படுத்துகின்றமை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் தீய பித்-அத்தான வழிகேடாகும்.
அல்லாஹ்ட காவல் ! நோன்பு மாதம் வந்து விட்டால் இரவுகளை ஹயாத்தாக்குவதாக கூறிக் கொண்டு அமைதியாக அமல் செய்ய வேண்டிய இரவுகளை அல்லோல கல்லோலப் படுத்தும் அவலங்களை நாம் யாரிடம் போய்ச் சொல்ல.! சஹருக்கு எழும்பி தஹஜ்ஜுத் தொழுது விட்டு  உணவு தயாரிக்கும் பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள் ஏன் பச்சிளம் பாலகர்கள் எவரையும் தூங்க விடாது முழுவதுமாக முடுக்கி விடப்பட்ட ஒலி பெருக்கிகளின் முழக்கம் பாமரத்தனமான பரிபாலனங்களின்  பகிரங்கமான அட்டகாசமாகும்.
மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மனப்பான்மையில் சொந்த மகால்லாவின் எல்லைகளுக்கப்பால் வளி  மண்டலத்தையும் ஆக்கிரமிக்கும் இந்த மன நோயாளர்கள் சிலவேளை ஒரு ஒலிப்பதிவு  செய்யப் பட்ட கிராத்தை அல்லது ஏதேனும் ஒரு பிரபலத்தின் பயானை பகல் நேரங்களிலும் பள்ளிவாயல்களில் போட்டு வைத்து விட்டு, ரமழான் மாதத்தின் சிறப்பை, கண்ணியத்தை பேணுவதாக எண்ணிக் கொண்டு இஸ்லாமிய நெறி முறைகளை ஹயாத்தக்குவதாக எண்ணிக் கொண்டு பட்டப் பகலிலும் படுகொலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அடுத்த சமூகங்கள் குறை கூறுகிறார்கள் அல்லது அரசாங்கம் ஒலி பெருக்கி பாவனையை மட்டுப் படுத்தச் சொல்கிறது என்பதற்கப்பால் நாம் எமது உயரிய இஸ்லாமிய வாழ்வியல் ஒழுக்கங்களை நாகரீகத்தை அடுத்த சமூகங்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு முன்வர வேண்டும்.
அகம் புறம் இரண்டினதும் தூய்மையை இஸ்லாம் வலியுறுத்துகிறது, அகமும் புறமும் மாசடைவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது, ஒலிமாசடைதலும் இஸ்லாத்தினால் வெறுக்கப் படுகின்ற விடயமாகையால் தேவைக்கு அதிகமாக குரலை உயர்த்தி பேசுபவர்களை கழுதையோடு குர் ஆன் ஒப்பீடு செய்துள்ளது.
சூரத்துல் லுக்மானில்  லுக்மான அலைஹிஸ்ஸலாம்  தனது மகனுக்கு வழங்கும் அதி முக்கிய உபதேசங்களை  குறிப்பிடும் அல் குர்ஆன் தேவைக்கதிகம்  குரலை உயர்த்தி கத்துவது குறித்து இவ்வாறு கூறுகிறது:
“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.( 31:19 )
ஜாஹிலிய்யக் கால அரபிக்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களிடம் உயர்ந்த குரலில் சப்தமிட்டு கதைப்பதனை அல்-குர்ஆன் சூரத்துல் ஹுஜ்ராத்தின் ஆரம்ப வசனங்களில் கண்டித்திருப்பதனை நாம் பார்க்கலாம், தமக்கிடையே உள்ள ஜாஹிலியா பண்பாடுகளை அரங்கேற்றவேண்டாம் என ஒரு உயரிய நாகரீகத்தை அன்றையா அறியாமைக்கால அறபுகளுக்கு இஸ்லாம் போதிப்பதனை நாம் இங்கு அவதானிக்கலாம்.
முஃமினகளே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும். [49:2]  
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் – அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு. [49:3]  
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! [49:4]
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடையே இரட்சகனோடு தானே உரையாடுகிறீர்கள் ஏன் ஒருவருக்கொருவர்  குரலை உயர்த்தி குர் ஆனை  ஓதுகிறீர்கள் என்றும், ஒருவரின் நித்திரையை பாதிக்கும் விதத்தில் குர் ஆன் ஓத வேண்டாம் என்றும், நமது நாவாலும் கரங்களாலும் அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம் என்றும், நாவின் விபரீதங்கள் பற்றியும் பல ஹதீசுகள் நமது உரையாடல்கள், தொடர்பாடல்கள், ஓசை குரல் பிரயோகங்கள் எவ்வாறான கட்டுக் கோப்பில் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றன.
குர்ஆனிலும் சுன்னஹ்விலும் அறிவியல் ஆதாரங்களைத் தேடும் நாங்கள் இந்த விவகாரத்தில் அறிவியல், உளவியல் மற்றும் நாகரிக விழுமியங்களைத் தேட மறுக்கின்றோம்.

ஒலி பெருக்கிகள் எழுப்பும் அதிர்வுகள் மனிதனின் உடல் உள கோளாறுகளுக்கு வழி வகுப்பதோடு  மாத்திரமன்றி சமூகத்திற்கு உள்ளிருந்தும் புறமிருந்தும் எமக்கு பல்வேறு சவால்களையும் அவ்வப்போது தோற்றுவித்தும் விடுகிறது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் இணைந்து இலங்கையிலுள்ள சகல பள்ளிவாயல்களுக்கும் ஒலிபெருக்கி பாவனை தொடர்பான வரைமுறைகளினை மிகவும் தெளிவாக அறிவுறுத்துமாறு நாம் வேண்டிக் கொள்கின்றோம்!
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe