"பசி ஆறவில்லை, இருந்தாலும் தாகத்துக்கு தண்ணீர் புகட்டப்பட்டுள்ளதைப் போலுள்ளது'' நல்லாட்சியின் அமைச்சரவையை இவ்வாறே பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது கடந்த முதலாம் திகதி (மே 01) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களும், 02ஆம் திகதி பிரதி, இராஜாங்க அமைச்சுக்களும் மாற்றம் செய்யப்பட்டன.
இதில் சந்தோஷப்படக்கூடிய விடயம் யாதெனில் இலங்கையின் கேந்திர மையமாக உள்ள கிழக்கு மாகõணம் பல அமைச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வழங்கப்பட்ட அமைச்சுக்களில் அதிகம் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளமை கிழக்கு முஸ்லிம்களுக்கு கிடைத்த சிறப்பும், மரியாதையும் என்றே கூறவேண்டும்.
அத்துடன் கிழக்கு மாகாணம் தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற மாகõணமாக இருந்தாலும் இங்கு எந்தவொரு தமிழ் பிரதிநிதி களுக்கும் அமைச்சுக்கள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறமிருக்க இன்னுமொரு அதிர்ஷ்டம் என்னவெனில் கொடுக்கப்பட்ட பிரதியமைச்சுக்களில் அம்பாறை மாவட்டத்துக்கு மாத்திரம் 02 முஸ்லிம்களுக்கு பலம்பொருந்திய பிரதி அமைச்சுக்களாம்.
உண்மையிலே சந்தோஷப்படத்தக்க விடயமும், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இந் நல்லாட்சிக்கு நன்றி சொல்ல உரித்துடையவர்களுமாவர்.
இங்கு நாம் நோக்கவிருக்கின்ற விடயம் யாதெனில்,
03 மு.கா. உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சுக்கள் அதாவது பிரதி அமைச்சர் பைஸால் காசீம் அவர்களுக்கு சுகாதார சுதேச வைத்திய பிரதி அமைச்சும், மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சு, பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலான அவர்களுக்கு தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சு, இதே நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு மீன்பிடி நீரியல் வளம் மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சும் சுதந்திரக் கட்சி உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 05 முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கொண்டு எதனை சாதிக்கலாம் என்பதே இங்கு ஆராயப்பட வேண்டியது. அதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக முன்னர் இறுதியாக கிழக்கில் இருந்த முஸ்லிம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அதாவுல்லா மாத்திரமே. அதன் பின்னர் இவ்விரு (அ.இ.ம.க, மு.கா.) முஸ்லிம் கட்சிகளும் கிழக்கில் பிரதானமாக களமிறங்கி வாக்குகளைப்பெற்று வெற்றிகளை தழுவிக் கொண்டபோதிலும் இம் மாகாணத்திலுள்ள பிரதிநிதி ஒருவருக்காவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு கொடுப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பது அரசாங்கத்தின் அலட்சியமா? அல்லது கட்சித் தலைமைகளின் சுயநலமா?
உண்மையிலே முன்பிருந்த அரசாங்கங்களில் கிழக்கு மாகாணம் மிகவும் பெறுமதிமிக்கதான பலம்பொருந்திய அமைச்சுக்களைக் கொண்டு கௌரவிக்கப்பட்டிருந்தது. மர்ஹும் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்கள் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸ அவர்களின் ஆட்சிக் காலத்தில் கப்பல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், பஷீர் சேகுதாவூத் மர்ஹும்களான அன்வர் இஸ்மாயில், அப்துல் மஜீட் போன்றோரும் அந்தந்த ஆட்சிக் காலங்களில் முழு அமைச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டு இம் மாகாணத்துக்கு ஒரு பலமாக காணப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் விட முழு இலங்கை முஸ்லிம்களும் வரவேற்ற ஓர் ஆளுமைமிக்கவர் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் 1994 2000 ஆம் ஆண்டு வரையிலும் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் கப்பல்துறை அமைச்சு வழங்கப்பட்டமையும் கிழக்கு மாகாணத்துக்கும், அம்பாறை மாவட்டத்துக்கும் கிடைத்த வரம் என்றே கூறவேண்டும்.
இவ்வாறான நிலையில் அப்போதிருந்த ஆட்சியின் ஜனாதிபதிகள் இம் மாகõணத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளை பேரம்பேசும் சக்தியாகவும், அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் ஆக்கிக்கொண்டனர்.
ஆனால், அன்று இருந்த அதே நிலையில்தான் இன்றும் கிழக்கில் வாக்குகளின் விகிதம் காணப்படுகின்றது. எனினும், அரசியலில் முஸ்லிம் கட்சிகளுக்கு கேந்திர மையாகக் காணப்படுவதும் கிழக்குதான்.
அன்று மாத்திரமல்ல இன்றும்கூட அதே நிலையிலேதான் வாக்காளர்கள் இருக்கின்றனர். வெறுமெனே தேர்தல் காலங்களில் வாக்குகளுக்கும், தங்களின் கட்சிகளின் கேள்விகளை அதிகரிப்பதற்கும் ஒரு தளமாக பாவிக்கின்ற தற்போதைய முஸ்லிம் தலைமைகள் இவ்வாறு காலத்தின் தேவைகளுக்காக உபயோகிக்கப்பட்ட இம் மக்களுக்கு இத்தனை பிரதியமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டதை விட ஒன்றேனும் பெறுமதி வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள ("கபினட்') அமைச்சு பெற்றுக்கொடுத்திருக்கலாம் அல்லவா?
இது ஒருபுறமிருக்க இந்த நல்லாட்சியில் நான்காவது தடவையாக அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், இது வரையில் இருந்த கிழக்கின் பிரதி அமைச்சுக்களும், இராஜாங்கமும் சாதித்தவை ஏனைய மாகாணங்களின் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
""இப்படியான நிலையில் சிந்திக்கும்போது இந் நல்லாட்சியில் கிழக்கு முஸ்லிம்கள் கணக்கிலெடுக்கப்படாதவர்களாகவே இருக்கின்றனரா?'' இப்படி சிந்திக்கும் இதேவேளை இதற்கு ஒப்பாக இன்னுமொன்றையும் நோக்கினால், அரசுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே. அந்த அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதிகள் பலருக்கும் இந் நல்லாட்சியில் பெறுமதியான அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை பார்க்கும்போது இந் நாட்டில் முஸ்லிம்கள் மதிக்கப்படுகின்றனர். முக்கியமான பொறுப்பு வாய்ந்த "கபினட்' அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே, ஒருபக்கமும் இல்லாமல் நடுநிலையாக சிந்தித்தால் வாக்குப் பலத்தை செறிவாக பெற்று தங்கள் கேள்விகளை மேலோங்கச் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சித் தலைமைகளும் ""கிழக்குக்கு ஒரு "கபினட்' அமைச்சு கொடுப்பது நன்று'' என்று கோரிக்கை விடுத்திருக்கலாம் அல்லவா?
அப்படியானல், மு.கா தலைமையும், அ.இ.ம.க. தலைமையும் வெறும் தேர்தல் காலங்களில் மாத்திரமா கிழக்கை நாடுகின்றன?.
இந்த விடயத்தில் அ.இ.ம.காவின் செயற்பாடுகள் இனிமேல்தான் கண்கானிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதாவது இம் முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளூராட்சித் தேர்தலிலுமே கிழக்கின் பக்கம் உட்புகுந்தது மட்டுமல்லாமல் பல சபைகளையும் கைப்பற்றியதுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 2 நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் பெற்றது.
தற்போதைய சூழலில், இன்னும் சில வருடங்களிலும் அடுத்தடுத்த தேர்தல் காலங்களிலும் அ.இ.ம.காவின் நடுநிலைமையானது கிழக்கில் பெரும் சவாலுக்கும், விமர்சனத்துக்குள்ளும் அமையப் போகின்றது என்பதில் ஐயமில்லை.
ஆனால், மு.காவைப் பொறுத்தவரையில் சுமார் 1990 இற்கு முன்பிருந்தே கிழக்கில் விதைத்த மரமாக உதித்து இன்று முழு நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கென்று அடையாளப்படுத்தப்பட்ட கட்சியாக வியாபித்திருக்கின்ற நிலையில் இக் கட்சிக்கு உரம்போட்ட கிழக்கு முஸ்லிம்களுக்கு வெறும் பிரதி அமைச்சுக்கள் வழங்கப்படுவது, இன்று நேற்றல்ல எப்போதுமே இருந்து வருவது நியாயமற்றதாகும்.
பொதுவாக சிந்திக்கும்போது கிழக்குக்கு ஒரு "கபினட்' அமைச்சை பெற்றுக் கொடுத்தால் தங்களின் கேள்விகள் குறைந்திடலாமென்று நினைத்திருந்தால் தற்போதைய மு.கா. தலைமை இந்த விடயத்தில் கவனம் செலுத்தாது இருந்திருக்கலாம்.
மாறாக இந்த மண்ணில் வளர்ந்த மரமே எமது கட்சி இம் மண்ணுக்கும் இம்மாகாணத்துக்கும் நாம் ஒரு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென எண்ணினால் நிச்சயம் அரசிடம் பேரம்பேசி இம் மாகாணத்துக்கு ஒரு முஸ்லிம் "கபினட்' அமைச்சையாவது பெற்றுக் கொடுத்திருக்கலாம்.
"அதற்காகத்தான் ஒன்றிற்கு மூன்று பிரதி அமைச்சுக்கள் தந்திருக்கின்றோம். இன்னும் என்னதான் இருக்கு' என்றும் கூறலாம் பலர்.
இப்படிக் கூறுவதிலேதான் ஒரு விடயத்தை நாம் உண்ணிப்பாக நோக்க வேண்டும். பிரதி அமைச்சு எனும் போது அமைச்சரவைக்கோ அல்லது அமைச்சரவை முடிவுகளிலோ சம்பந்தப்படாமல் வெறும் பெயரளவில் இருந்து என்ன பயன்.
இதனை வைத்து நோக்கும் போது மர்ஹும் அமைச்சர் அஷ்ரபிலிருந்து கிழக்கிலுள்ள தற்போதைய பிரதிநிதிகள் வரையிலும் நாடாளுமன்றம் சென்ற அனைவரும் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாகவே சென்றிருக்கின்றனர்.
இது முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரபினால் மக்கள் மத்தியில் இடப்பட்ட விதை என்றுதான் கூறவேண்டும் இந்த நிலைப்பாட்டை மாற்றுவதென்பது மிகவும் கடினமானது.
அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸினூடாக நாடாளுமன்றம் சென்றாலும் ஒரு முழு அமைச்சையோ அல்லது "கபினட்' அமைச்சையோ பெறுவதென்றால் அந்த உறுப்பினர் மு.காவிலிருந்து விலகியே பெற்றுக் கொண்ட வரலாறுகள்தான் இருக்கின்றது.
இந்த விடயத்தை ஒப்பீட்டளவில் நோக்கும் போது தலைமைதான் என்றும் மரக்கொம்பில் அமர வேண்டும் மாறாக அந்த இடத்துக்கு அருகிலும் இன்னுமொருவர் அமர்வது தடையாகும் என்பதுபோலவே உள்ளது.
உண்மையில் சில விடயங்களை உற்றுநோக்கும் போது அரசியலில் தனக்கென ஒரு இடத்தை எப்போதும் தக்க வைப்பதற்காகவே இவ்வாறான முஸ்லிம் கட்சிகள் தற்காலத்தில் செயற்படுகின்றனவா? என்ற எண்ணம் உதிக்கின்றது.
"கபினட்' அமைச்சு தேவையென்றால் ஒரு கட்சி தேவை என்கின்ற அளவுக்கு இன்றைய முஸ்லிம் அரசியல் நிலை மாற்றமடைந்துள்ளமை சமூகத்தை சின்னாபின்னமாக்கும் செயல் என்றுதான் கூற வேண்டும்.
எனவேதான், ஒரு விடயத்தை இந்தக் கட்டுரை மூலம் முன்வைக்கலாம் என முனைகின்றேன், அதாவது கட்சியை வைத்து தங்களது கேள்விகளை உயர்த்த நினைக்கும் தலைமைகளுக்கு என்றும் தலை சாய்த்துக் கொண்டு "உட்காரு என்றால் உட்கார்ந்து, எழும்பு என்றால் எழும்பும்' எனும் மரபு வசனத்துக்கு ஒப்பாக எமது பிரதேச அரசியல்வாதிகள் இருந்து விடாமல் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு முழு அதிகாரமிக்க பதவிகளில், தாங்கள் பதவி வகித்து சேவையாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயணிக்க வேண்டும்.
இன்னுமொன்றை இவ்விடத்தில் தெளிவுபடுத்த வேண்டும், இவ்வாறு கூறப்பட்ட, கிழக்குக்கு முஸ்லிம் பிரதிநிதி "கபினட்' அமைச்சாராக வேண்டும் என்பது பிரதேசவாதம் என எண்ணக்கூடாது. ஏனெனில் அரசினால் முஸ்லிம்கள் பலருக்கும் "கபினட்' வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிந்தனைக்கு உட்படுத்த வேண்டியது இதுதான் அதாவது "தலைவலி தனக்கு வந்தால்தான்தெரியும்' இங்கு அனைத்தையும் ஒவ்வொன்றாக விவரிக்க முடியாது. ஒரு பிரதேசத்திலுள்ள அடிப்படை சிந்தனை மற்றும் இயல்புகள் அந்தந்த பிரதேசத்தவருக்கே இலகுவாக புரிந்துகொண்டு செயலாற்ற முடியும்.
அத்துடன், சில சந்தர்ப்பங்களில் வாக்குகளை வாரி வழங்கிய தலைமைகளை சிம்மாசனத்தில் உட்கார வைத்த சாதாரண வாக்காளப் பொது மகன் தன்னுடைய தேவையொன்றை கூற முனைவதற்கு இவ்வாறான தலைமைகளிடம் நேரடியாக செல்வது மிகவும் எளிதானதல்ல. "ஓனான் விட்டு வெற்றிலை ஆயும் கதையாக மாறி வருகின்றது' இன்றைய கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் நிலை.
- கியாஸ் ஏ. புஹாரி