Ads Area

சம்மாந்துறை கோரக்கர் கிராம இளம் விஞ்ஞானியின் 82வது கண்டுபிடிப்பு.

வி.ரி.சகாதேவராஜா (காரைதீவு குறூப் நிருபர்)
கம்பிகளை இலகுவாகக் கட்டும் கருவியை (Wire Building Tool) உருவாக்கியுள்ளார் யாழ். பல்கலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்.
கட்டட நிர்மாண வேலைகளின் போது சாதாரணமாக கம்பிகளை ஆணி அல்லது குறடுகளின் உதவிகொண்டு கையினால் திருகி இணைப்பது வழமையாகும். இதனால் கைகளில் வலியும் காயங்களும் ஏற்படுவதுடன் விரைவாக கம்பிகளை இணைக்க முடியாமலும் போகும். மேலும் பிணைத்துக் கட்டும் கட்டுக்கம்பிகளும் வீணாகும். இவ்வாறு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக யாழ். பல்கலைக்கழக தொழிநுட்பபீட மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமார் என்பவர் கம்பிகளை கட்டும் கருவியொன்றை (Wire Building Tool) புதிதாகக் கண்டுபிடித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவனான இவர் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்தவராவார்.
இக்கருவி மூலம் இரு கம்பிகளின் நான்கு பக்கங்களும் உறுதியாக இருக்குமாறு இணைப்பதுடன் இதில் உள்ள சுழலும் பொறியியல் தொழினுட்பத்தின் காரணமாக குறைந்த விசையைப் பயன்படுத்தி விரைவாகவும் நேர்த்தியாகவும் கம்பிகள் வீணாகாமலும் அழகாகக் கட்ட முடியும். இதன் ஒன்றின் உற்பத்தி விலை 370 ரூபா ஆகும். இக்கருவி கட்டட நிர்மாண வேலை செய்யும் மேசன்மார் மற்றும் தொழிலாளர்களுக்கு மிகப் பயன்வாய்ந்த கண்டுபிடிப்பாகும்.
மேலும் இக்கருவிக்கான ஆராய்ச்சி பற்றி வினோஜ்குமார் குறிப்பிடுகையில்,
"நான் ஒரு வருடமாக ஆராய்ந்து 11 மாதிரிக் கருவிகளை உருவாக்கினேன். எனினும் சரியான முறுக்கம் வரவில்லை. அம்முறுக்கத்தைப் பெறுவதே பிரச்சினையாகக் காணப்பட்டது.
பின்னர் மின்சாரத்தில் இயங்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அது ஒன்றின் விலை 6500 ரூபாவுக்கு மேல் சென்றது. இது தொழிலாளிகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. எனினும் முயற்சியைக் கைவிடாமல் சிறிய உருளை வடிவான குழாய்க் கம்பியினுள் சூழலும் தொழினுட்பத்தைக் கொண்ட அமைப்பை உருவாக்கினேன்.
அதன் பின்னர் அது வெற்றியளித்தது. மேலும் அது பற்றிய வரைபடங்கள் மாதிரிகளை உருவாக்கி செலவு குறைவான முறையிலும் இலகுவானதும் வினைத்திறனானதுமான இக்கருவியை உருவாக்கினேன். இதற்கு ஆக்கவுரிமைப் பத்திரத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன்.
மேலும் எனது கண்டுபிடிப்புக்களுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கிவரும் எனது பல்கலைக்கழகத்திற்கும்,UGC பல்கலைகழக பேராசிரியர் புத்திக்க அவர்களுக்கும், கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் தகுதன ஜெயரத்ன அவர்களுக்கும், தென்கிழக்குப் பல்கலைகழக பேராசிரியர் முசாதிக் அவர்களுக்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவிற்கும் மற்றும் சுவிஸ் 'அன்பே சிவம்' அறப்பணி அமைப்பிற்கும் பணிவன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.
இதுவரை 81 கண்டுபிடிப்புகளுக்கு மேல் செய்த இவர் மூன்று சர்வதேச விருதுகளையும் 31 தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe