சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இன்று 2019-09-20 நடமாடும் சேவையொன்று சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.ஹனீபா தலைமையில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இடம் பெற்றது.
சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் சமூகமளித்திருந்த இந் நிகழ்வில் பொது மக்களின் காணிப் பிரச்சினைகளான காணி உத்தரவுப் பத்திரம் இல்லாமை, உத்தரவுப் பத்திரங்களைப் பிரிவிட்டுக் கொள்ள முடியாமை, தங்களது காணிகளுக்கான உறுதிகளை இதுவரை பெற்றுக் கொள்ளாமை, அனுமதிப் பத்திரம் இன்றி தங்களது பிள்ளைகளுக்கு உத்தரவுப் பத்திரத்தை பிரிவிட்டுக் கொடுத்தமை போன்ற பல வகையான பிரச்சினைகள் இந் நடமாடும் சேவையில் கவனத்தில் கொள்ளப்பட்டது.
பெரும்பாலான காணிப் பிரச்சினைகளுக்கு மக்களுக்கு திருப்த்திகரமாக அவ்விடத்திலேயே தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது குறிப்பாக, அனுமதியின்றி உத்தரவுப் பத்திரங்களைப் பிரிவிட்டு எதிர்காலத்தில் அளிப்பு வழங்க முடியாமல் இருந்த உத்தரவுப் பத்திரக்காரவர்கள் அனைவரது பிரச்சினையும் மிக விரைவான முறையில் தீர்த்து வைக்கப்பட்டது மேலும் உத்தரவுப் பத்திரம் கிடைக்கப் பெறாதவர்கள் அல்லது ஏலவே மாகாண காணி ஆணையாளரின் அனுமதிக்காக அனுப்பி அனுமதிகள் கிடைக்கப் பெறாதவர்களது பிரச்சினைக்கும் உடனடித் தீர்வுகள் வழங்கப்பட்டது அதற்கான அனுமதிப் பத்திரங்களை மாகாண ஆணையாளர் கையோடு கொண்டு வந்து மக்களிடம் கையளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திரு. அனுர தர்மதாச மற்றும் உதவிக் காணி ஆனையாளர் திரு. ரவி ராஜன் மற்றும் அம்பாறை மாவட்டம் சார்பாக காணி அலுவலர் திரு. முஹம்மட் முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தகவலுக்கு நன்றி
திரு. முஹம்மட் முஸம்மில்
காணி அலுவலர்
அம்பாறை கச்கேசரி