Ads Area

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி சகல வசதிகள் கொண்ட கல்லூரியாக தரமுயர்த்தப்படும்.

அன்சார் காசீம்.

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி சகல வசதிகள் கொண்ட தொழில்நுட்பவியல் கல்லூரியாக தரமுயர்த்த சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக என விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் அழைப்பினை ஏற்று கடந்த வியாழக்கிழமை(13) சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு விஜயம் செய்த அமைச்சர் கல்லூரியினைப் பார்வையிட்டு பின்னர், கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹஸன் தலைமையில் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொர்ந்தும் உரையாற்றுகையிலே - இந்நாட்டில் உள்ள எதிர்கால சந்ததியினருக்கு சுவீட்சமிக்க வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு தொழில்நுட்பக் கல்வி பாரியளவில் விருத்தி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் தொழில்வாய்ப்பினை ஒருவர் இலகுவில் பெற்றுக்கொள்வதுடன், அதிகளவிலான பணத்தினையும் ஈட்டிக்கொள்ள முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் வேண்டுதலின் பேரில் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியை சகல வசதிகள் கொண்ட கல்லூரியாக தரமுயர்த்துவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் உரையாற்றுகையிலே – 43 வருட கால வரலாற்றினைக் கொண்ட இக்கல்லூரியானது, 1974ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகவிருந்த பதியுத்தீன் மஹ்மூத்தினால் 1974.04.25ஆம் திகதி கனிஷ்ட தொழில்நுட்ப நிறுவனமான திறந்து வைக்கப்பட்டது. 1989.11.01ஆம் திகதி தொழில்நுட்பக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது. நாட்டில் 39 தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13வது தொழில்நுட்பக் கல்லூரியாக சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி விளங்குகின்றது. 

இக்கல்லூரியில் தற்போது எந்திரவியல், வணிகம் மற்றும் விசேட கற்கை நெறிகள் முழுநேரமாகவும், பகுதிநேரமாகவும் தேசிய தொழில் தகைமை மட்டம்-3, மட்டம்-4 பிரிவுகளில் 35 கற்கைநெறிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தற்போது 1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றதோடு, 13 நிரந்தர போதனாசிரியர்களும், 35 வருகைதரு போதனாசிரியர்களும் கற்பிக்கின்றனர்.

43 வருட காலம் பழமைவாய்ந்த இக்கல்லூரியானது அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தங்களது தொழில் கல்வியினை இக்கல்லூரியின் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இக்கல்லூரி பல்வேறு குறைபாடுகளுடன் நீண்டகாலமாக இயங்கி வருகின்றது.

அந்த வகையில் இக்கல்லூரின் மாணவர் தொகைக்கேற்ப விரிவுரையாளர் மண்டபம், வகுப்பறைக் கட்டிடம், நிர்வாக கட்டிட அலகு, வாசிகசாலை, தொழில்நுட்ப ஆய்வுகூடம், தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், வேலைத்தளக் கட்டிட வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், தேசிய தொழில் தகமை மட்டம்- 5 கற்கைநெறிகளை பயில இப்பிரதேச மாணவர்கள் தூர இடங்களிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கற்று வருகின்றனர். எதிர்வருகின்ற காலங்களில் தேசிய தொழில் தகமை மட்டம்- 5 குரிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கையினை எடுக்க வேண்டும்

எனவே, அமைச்சர் அவர்கள் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி சகல வசதிகள் கொண்ட கல்லூரியாக மாற்றித்தருமாறு போதனாசிரியர் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். என்றார்.

இத்தொழில்நுட்பக் கல்லூரியின் 5 எஸ். திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்ய திட்டங்கள் சம்பந்தமாகவும் மற்றும் ஏனைய அபிவிருத்தி சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை அடங்கிய மகஜரினை அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கையளித்தார்.

இதில் விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் திருமதி சந்தியா விஜயபண்டார, தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.என்.கே. மலலசேகர, தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், போதனாசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe