Ads Area

சவால்களை முறியடிக்க தமிழ்-முஸ்லிம் சமூதாயம் ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டியது அவசியம் - மன்சூர் எம்பி.

அன்சார் காசீம்.

இன்றைய அரசியலில் என்றுமில்லாத அளவு சிறுபான்மை சமுதாயங்கள் நெருக்கடியையும் ஆபத்துக்களையும் எதிர்நோக்கியிருக்கின்றன. இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு கருத்து வேறுபாடுகளுக்கப்பால், முஸ்லிம் சமுதாயமும், தமிழ்ச் சமுதாயமும் ஒன்றுபட்டு, ஒரே அரசியல் அணியிலேயே பயணிக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. என திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை, வீரமுனை ஐங்கரன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவிஞினி. யுகதாரினி செசிலியா சோமசுந்தரம் ஏழுதிய “கரையைத்தேடு” எனும் நூல் வெளியீட்டு விழா வீரமுனை இராம கிருஷ்ணன் மகாவித்தியாலயத்தின் கேட்போர்கூட மண்டபத்தில் ஐங்கரன் கலைக் கழகத்தின் உபதலைவர் ஏ.சுதர்ஷன் தலைமையில் (10) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – சிறுபான்மை மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்திற்கொண்டு தமிழ், முஸ்லிம் தலைமைகள் தூர நோக்குடன் செயற்பட வேண்டும். மிகவும் முக்கியமான அரசியல் ரீதியான தீர்க்கமான தற்போதைய சூழலில் முறண்பாடுகளை வளர்த்துக்கொண்டு செல்வதன் மூலம் எதனையும் அடைந்து கொள்ள முடியாது.

நிலையான விட்டுக்கொடுப்போடு தமிழ், முஸ்லிம் உறவு கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இனங்களுக்கிடையிலான முறன்பாடுகள்தான் நாட்டிலே பல்வேறு பிரச்சினைகளும், பிரிவினைகளும் ஏற்படக் காரணமாகும். அதனால்தான் கடந்த காலங்களில் அனைத்து இனமக்களும் பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ளனர். அதற்கு மக்கள் காரணமல்ல. அரசியல்வாதிகளும், அரசியல் தலைமைகளும் தான் பிரச்சினைகளின் ஊக்குவிப்பாளர்களாக காணப்படுகின்றார்.



இன்று அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சில அரசியல் வாதிகள் முனைந்து கொண்டிருக்கின்றனர். இந்துக்கள் இல்லாத பிரதேசத்தில் இந்துக் கோவில் அவசியமில்லை. எந்தவொரு முஸ்லிம்கள் இல்லாத பிரதேசத்தில் பள்ளிவாசல் தேவையில்லை. அதேபோல் எந்தவொரு பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் பௌத்த விகாரை அவசியமில்லை.

ஆனால் இன்று அம்பாறை இறக்காமம் மாயக்கல்லிமலை பிரதேசத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசத்திலே பண்டையர்கள் வாழ்ந்ததாக காரணத்தை காட்டி அங்கு ஒரு பௌத்த விகாரையை அமைக்கும் முயர்ச்சியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்தும், செல்வாக்கினை இழந்தும் காணப்படுகின்ற அமைச்சர் தயா கமகே மேற்கொண்டுள்ளார். அதற்கான அறிவிப்பினை பாராளுமன்றத்திலே வெளிப்படையாக செய்திருக்கின்றார். அதனை சிறுபான்மை மக்களின் நேர்மையான அரசியல் தலைமை என்ற வகையிலே அதனை எதிர்ப்பதற்கு சித்தமாகவும், தைரியமாகவும் உள்ளோம். இவ்வாறான அரசியல் தலைமைகள் விடயத்திலே நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.




எனவே, இச்சூழ்நிலையில்தான் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்பட வேண்டியதொன்றாக நோக்கப்படுகின்றது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமாக அமைய வேண்டுமாயின் நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இந்நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப். சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பரீனா, கவிஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe