இந்த வருடம் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
மேலும், பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் விரைவாக அது குறித்து தகவல்களை தெரிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.
இது தொடர்பான பிரச்சினைகளை 1911 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அறிவிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.
இம்முறை 4,661 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
அத்துடன் 2 இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
அத்துடன் இரத்தமலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மற்றும் மெகசீன் சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.