ஷில்லாங்:
இந்தியா ஒரு இந்து நாடு. இது முஸ்லீம்களின் நாடாக மாறி விடக் கூடாது. அதை தடுக்க மோடிஜியால்தான் முடியும் என்று மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபத சுதீப் ரஞ்சன் சென் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணையின்போது இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்கள் அல்லாத பழங்குடியின மக்கள் இந்தியாவில் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வசிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல், தாமதமே இல்லாமல் இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும். ஆவணம் கூட அவர்களிடம் கேட்கத் தேவையில்லை. இதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சென் கூறியுள்ளார்.
அமோன் ராணா என்பவர் குடியுரிமை சான்றிதழ் கோரி மேகலாய ஹைகோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சென் நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் பேசியவை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியின் பேச்சு போல இல்லாமல் ஒரு அரசியல்வாதியின் பேச்சு போல நீதிபதி சென் குறிப்பிட்டவை இருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
யாரும் இந்தியாவை இன்னொரு இஸ்லாமிய நாடாக்க முயலக் கூடாது. அப்படி செய்ய முயன்றால் இந்தியாவும் சரி, உலகமும் சரி பேரழிவை சந்திக்கும். ஸ்ரீ நரேந்திர மோடிஜியின் கீழ் இயங்கும் இந்த அரசினால் மட்டுமே இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும். இதன் ஆழத்தை உணர முடியும். இதற்குத் தேவையானதை பிரதமர் செய்ய வேண்டும். மேற்கு வங்க முதல்வர் மமதாஜியும் தேசிய நலன் கருதி பிரதமருக்கு ஆதரவாக இருப்பார்.
உண்மையான இந்தியாவை, இந்தியப் பிரிவினையை சுட்டிக் காட்டாமல் நான் தீர்ப்பளித்தால் அது எனது மனசாட்சிக்கு விரோதமானதாகும், எனது கடமையிலிருந்து தவறியதாகும். பாகிஸ்தான் நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. அதேபோல இந்தியா, தன்னை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் மதச்சார்பற்ற நாடாகவே அது இருக்கிறது.
எனது தீர்ப்பின் நகலை பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கு கொண்டு சேர்ப்பிக்க வேண்டும். இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், காஸிக்கள், ஜைனியாஸ், கரோஸ் ஆகியோரின் நலன்களைக் காக்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்கனவே இங்கு வந்து விட்ட, இனியும் வரப் போகிற முஸ்லீ்ம்கள் இல்லாத சமூகத்தினரை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
சென்னின் குடும்பம் மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. ஷில்லாங்கில் பிறந்து வளர்ந்த சென், கடந்த 2014ம் ஆண்டு மேகாலயா உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு இன்னும் ஒரு வருடம் பதவிக்காலம் உள்ளது. சென்னின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.