ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரியும், அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, வாக்களித்த அனைத்து எம்.பிக்களுக்கும் சபையில் ரணில் நன்றி தெரிவித்து உரையாற்றிய ரணில் சபாநாயகரின் தைரியத்தையும் பாராட்டினார்.
"கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றப்பட்ட அரசியல் சூழ்ச்சி தற்போது முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ அழுத்தங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பேரம் பேசுதல்களுக்கு மத்தியிலும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையிலும், நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டும் என்னைப் பிரதமராக்கும் தீர்மானத்துக்கு வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, அரசியல் சூழ்ச்சி நடவடிக்கைகள், பெரும் குழப்பங்கள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்தச் சபையை தற்றுணிவுடன் திறம்பட வழிநடத்திய சபாநாயகரையும் மனதார வாழ்த்திப் பாராட்டுகின்றேன். இதற்கும் அஞ்சாமல் நடுநிலையுடன் சபாநாயகர் செயற்பட்ட காரணத்தால்தான் நாமும் தீர்மானங்களை இந்தச் சபையில் நிறைவேற்றக்கூடியதாக இருந்தன" - என்றார்.