நாட்டில் தலைவிரித்தாடும் சீதனக் கொடுமை என்று ஒழியப் போகின்றதோ..??
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாரமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷூக்கும் 15 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது, 25 சவரன் நகைகளும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வரதட்சணையாக தமிழ்செல்வி குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் 10 லட்சம் ரூபாய் தராவிட்டால், விவகாரத்து செய்துவிடுவதாக தமிழ்செல்வியை, கணவர் வெங்கடேஷ் அடித்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு தமிழ் செல்வியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார் வெங்கடேஷ். பின்னர் 10 நாட்களுக்கு முன்பு தனது வக்கீல் மூலம் தமிழ்செல்விக்கு விவாகரத்து நோட்டீசும் அனுப்பியுள்ளார்.
கணவர் கேட்கும் கூடுதல் வரதட்சணை பணத்தை கொடுக்க முடியவில்லை என்று வருத்ததுடன் காணப்பட்ட தமிழ்செல்வி, இனிகணவருடன் சேர்ந்து வாழ வழியில்லை என்று கூறிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த தமிழ்செல்வி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள வெங்கடேஷையும், அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்.