மழை வேண்டி ஓணான் மற்றும் தவளைக்கு, திருமணம் செய்து வைத்த ஊர் மக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் அடுத்த திருமணி கிராமத்தில், கடும் வறட்சி காரணமாக, குடிநீரின்றி மக்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழை வேண்டி, கிராமத்தில் உள்ள பொன்னியம்மனுக்கு, நேற்று, களி மற்றும் கருவாடு குழம்பு வைத்து, படையலிட்டு, ஓணான் மற்றும் தவளைக்கு, திருமணம் செய்து வைத்து, கிராம மக்கள் நுாதன வழிபாடு நடத்தினர். இதில், கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : ஓணானுக்கும், தவளைக்கும் திருமணம் செய்தால், மழை வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. கடந்த ஐந்து ஆண்டாக, ஓணானுக்கும், தவளைக்கும் திருமணம் செய்தபோது, மழை பெய்தது. அதன்படி, தற்போது நுாதன வழிபாடு நடத்தி உள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.