Ads Area

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை எரித்து பல ஏழை சிங்கள குடும்பங்களின் அடுப்பை அனைத்து விட்டார்கள்.



மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

இனவாதக் கும்பல் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை எரித்து பல ஏழை சிங்கள குடும்பங்களின் அடுப்பை அனைத்து விட்டார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி நாட்டில் இடம் பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத குண்டுத் தாக்குலினால் நம் நாடு இழந்தவை ஏராளம். பல உயிர் இழப்புக்கள், உடமை இழப்புக்கள், நாட்டின் பொருளாதாரம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

தீவிரவாத சிந்தனை கொண்ட சில முஸ்லிம் குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட இந்த நாசகார செயலினால் இன்று இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் நாளாந்தம் இன்னல்களுக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்காங்கே புகைந்து புகைந்து தற்போது மினுவாங்கொடை, குருநாகல், வாரியபொல, குளியாப்பிட்டிய, நிக்கவரடிய, சிலாபம் மற்றும் புத்தளம் பிரதேசங்களில் கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட, படிப்பறிவில்லாத, வேலைவெட்டியில்லாத, போதைக்கு அடிமையான, நாகரீக சிந்தனையற்ற, சமூக அக்கறை என்று எதுவுமில்லாத சில சிங்கள இனவாத காடையர்கள் சில பல நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தயார்படுத்தப்பட்டு முஸ்லிம் மக்கள் மீது காடைத்தனம் புரிய வழி நடாத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த இனவாத சிந்தனை கொண்ட காடையர்களால் மினுவாங்கொடை, குருநாகல், வாரியபொல, குளியாப்பிட்டிய, நிக்கவரடிய, சிலாபம் மற்றும் புத்தளம் போன்ற பகுதியில் முஸ்லிம்களின் தொழிற்சாலைகள், ஆடை வர்த்தக நிலையங்கள், வாகணங்கள், கட்டிடங்கள் மற்றும் உணவகங்கள் என ஏராளமான வர்த்தக மையங்கள் நாசம் செய்யப்பட்டுள்ளது. 

தாக்குதல் நடாத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள ஆடை வர்த்தக நிலையங்களில் வேலை செய்தவர்களில் அதிகமானோர் ஏழைச் சிங்கள மக்கள், மினுவாங்கொடையில் உள்ள பௌஸ் ஹோட்டலில் வேலை செய்தவர்களில் அதிகமானோர் ஏழைச் சிங்கள மக்கள், மினுவாங்கொடையில் நாசம் செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் தொழிற்சாலையில் வேலை செய்தவர்களில் 70 வீதமானவர்கள் சிங்கள மக்கள், அதே போன்று ஏனைய வர்த்தக நிலையங்களில் வேலை செய்தவர்களில் அதிகமானோரும் சிங்கள மக்கள்தான்.


Menaka Wasantha எனும் சிங்கள சகோதர் ஒருவர் தனது முகநுாலில் இப்படிப் பதிவேற்றியுள்ளார்,

இது மினுவங்கொட 'பெளஸ் ஹோட்டல் '. இங்கு வேலை செய்த அனைவருமே சிங்கள மக்கள். விமான நிலையத்துக்குப் போகின்ற/வருகின்ற வாகனங்கள் இவ்விடத்தில் நிறுத்தி , எதையாவது ருசித்து விட்டுப் போவது வழக்கம். எப்போதும் சனக் கூட்டம் நிரம்பி வழியும் இடம். இது பலரது கண்களுக்கு உறுத்தலாயும் அமையும்.

12 வருடங்களாக மினுவங்கொடவில் புழங்கித் திரியும் நான் கூட இந்த ஹோட்டலில் தேனீர் அருந்தியிருக்கிறேன். ஒரு முறை தேனீர் அருந்தும்போது அங்கு பணிபுரியும் சிங்களப் பெண்மணியோடு கதைத்துக் கொண்டது ஞாபகம் வருகிறது. "அநியாயம் சொல்லக் கூடாது மகனே..இந்த முதலாளி எங்களுக்கு மாதம் 60 ஆயிரம் அளவில் சம்பளம் தருகிறார். அது தவிர, எங்களது பெரு நாள்/புது வருடத்துக்கு 'போனஸ்' கூடத் தருகிறார். இதையே எம்மவர் யாராவது எமக்குச் செய்வார்களா?" என்று பூரித்துக் கொண்டார்.

வெளியேறும் போது , வாசலில் நின்ற காவலாளியிடமும் பேச்சைக் கொடுத்தேன். "நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஒரு அவசரத்துக்கு உதவி கேட்டால் பணமும் கொடுக்கிறார்கள். சொல்லப் போனால் எங்கள் மக்களைவிட இவர்கள் சிறந்தவர்கள். நானென்றால் இந்த இடத்தை விட்டும் ஒரு நாளும் விலகப் போவதில்லை." என வியந்து கொண்டார்.


இப்போதென்ன, பெளஸ் ஹோட்டலுக்குப் பதிலாக, அவ்விடத்தில் - சிதைக்கப்பட்ட குப்பை மேடொன்று கிடக்கிறது. பிரதேச அரசியல்வாதிகளும் மனிதாபிமானமற்ற ஒரு கும்பலும் சேர்ந்து , நூற்றுக் கணக்கான சிங்களச் சகோதரர்களது அன்றாடப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள்!

என்று மிகவும் கவலையோடு பதிவேற்றியுள்ளார்.

இனவாதிகள்  “முஸ்லிம் வர்த்தக நிலையங்களை அடித்து நொறுக்கி வீசும் போது அங்கே வேலை செய்து வந்த ஏழை அப்பாவிப் சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை மறந்து விட்டார்கள், ஏழைச் சிங்கள மக்களின் அன்றாட தொழிலை மறந்து விட்டார்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை எரித்து சிங்கள ஏழை மக்களின் வீட்டின் அடுப்பை அனைத்து விட்டார்கள்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe