Ads Area

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் செல்பி எடுத்து அனுப்ப உபி அரசு உத்தரவு.

லக்னோ:

உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களை ஒழுங்குப்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக உடல் தகுதிப் பெறாத 50 வயது நிரம்பிய சில காவலர்களை விருப்ப ஓய்வில் அனுப்பினார். 

இதனையடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது, பணிக்கு வராமலே சம்பளம் வாங்குவது போன்ற முறைகேடுகளை தடுக்க புதிய முறையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஆசிரியர்கள் காலை 8 மணிக்கு பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் விதமாக தங்கள் வகுப்பறையின் முன் நின்று செல்பி எடுத்து அதனை பேசிக் சிஷா இணையத்தளப் பக்கத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள்  அனுப்ப வேண்டும். 

இல்லை என்றால், அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முதன்முறையாக உத்தரபிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளது.

மேலும் முழு மாநிலத்திற்கும் நடைமுறைக்கு விரைவில் வரும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாராபங்கி ஆசிரியை ஒருவர் கூறுகையில், ‘நகரங்களில் போக்குவரத்து அதிகம் காணப்படும். கிராமங்களில் பொது போக்குவரத்து அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. 

மோசமான நெட்வொர்க் மற்றும் செல்போனில் டேட்டா இல்லாதது போன்றவற்றால்கூட பாதிப்புகள் ஏற்படும். ஒருநாள் நான் வந்த டெம்போ, ரெயில்வே கிராசிங்கில் மாட்டிக் கொண்டது. இதனால் தாமதமாக வந்தேன். என் ஒரு நாள் சம்பளம் வீணாகி விட்டது’ என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe