முஸ்லிம்கள் ஒருபோதும் அரசுக்கு எதிராக போர் செய்யவில்லை, தனி நாடு கோரவில்லை - பா.உ.இஸ்மாயில்.
முஸ்லிம்கள் மிகவும் அச்சத்துடன் வாழும் நிலைமை இந் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. யாரோ சிலர் செய்த மிலேச்சத்தனமான விடயங்களுக்காக முழு முஸ்லிம்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும், அடக்கி ஒடுக்க நினைப்பதும் எந்த வகையிலும் நியாயமற்றது.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே குறித்த விடயத்தை உரையாற்றினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் சிறுபாண்மைச் சமூகத்தை குறிப்பாக முஸ்லிம்களை நசுக்க நினைப்பதனால் வெறுமெனே ஒரு சமூகம் மாத்திரமன்றி முழு நாடுமே பொருளாதார வீழ்ச்சியில் தள்ளப்பட்டுகின்றமையை அனைவரும் உணர வேண்டும்.
முஸ்லிம்கள் ஒருபோதும் அரசுக்கு எதிராக போர் செய்யவில்லை, தனி நாடு கோரவில்லை. இந் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்ற விடயங்களில் பாரிய அளவு செல்வாக்குச் செலுத்தியவர்களே!
பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருந்த நாடு இன்றைய நிலைமையில் பின்னடைவை சந்திக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
எதிர் காலத்தில் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவர் மனதிலும் உதிக்க வேண்டும். எதிர் காலத்தில் எங்களுக்குள்ளேயே பிணக்குகள் இருக்கக்கூடாது.
அரசாங்கத்தில் இருக்கின்ற எத்தனையோ உயர் அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் இருக்கிறார்கள். சுற்றுலாத்துறையை மூலாதாரமாகக் கொண்ட எமது நாடு இன்று பெரும் பின்னடைவை எதிர்நோக்குகின்றது. இந் நிலைமையில் மேலும் வலுக்குமளவு இனவாத சிந்தனைகளை விதைப்பது நல்லதல்ல.
எமது இளைஞர்கள் தொழிலுக்காகவும், கல்வி மேற்படிப்புகளுக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டிய பல்வேறுபட்ட தேவைகள் இருக்கும் காலகட்டத்தில் இப்படியான நாட்டுக்குள் இடம்பெறும் பிணக்குகளால் வெளிநாடுகள் எமது நாட்டை விமர்சணம் செய்து தடைகள் ஏற்படுத்துகின்ற அமைப்பு உருவாகியுள்ளது.
இந் நிலைமை மாற வேண்டும். இந் நாட்டிலுள்ள முழு சமூகங்களும் ஒற்றுமையை பற்றிப் பிடிக்க வேண்டும். இதன் மூலம் இலங்கை ஒரு பொருளாதார, சகூக ரீதியில் முன்மாதிரியான நாடாக மாறவேண்டும். - என்றார்.
(ஊடகப் பிரிவு)