Ads Area

காழி நீதிமன்றில் பெண்கள் நீதிபதிகளாகப் பணியாற்றுதல் தொடர்பிலான நிலைப்பாடு.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் பிரகாரம், (40 வயதுக்கு மேற்பட்ட) முஸ்லிமான ஆணாக இருப்பதே காழி பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரே தகுதியாக இருக்கின்றது. இந்த நிபந்தனையானது தரமான நீதிபதிகளை உள்வாங்குவதற்குப் போதுமானதல்ல என்ற கருத்தின் பிரகாரம், இந்நிபந்தனைகளில் திருத்தங்கள் முன்மொழியப்பட்ட போது 'ஆணாக இருத்தல் என்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும்' என்ற முன்மொழிவில் கருத்து வேறுபாடு தோற்றம் பெற்றது. பெண்கள் நீதிபதிகளாக வருவதற்கு எவ்விதமான தடையுமில்லை என்று ஒரு சாராரும், பெண்கள் நீதிபதிகளாக வருவது ஷரீஅத்துக்கு முரணானது என்று இன்னுமொரு சாராரும் கருதுகின்ற நிலை தோற்றம் பெற்றது.

பெண்கள் காழியாக வர முடியாது என்று மிகத் தெளிவாக சொல்லும் நேரடி ஆதாரங்கள் எதுவும் அல்குர்ஆனிலோ அஸ்ஸுன்னாவிலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக இறங்கிய அல்குர்ஆன் ஆயத்களுக்கும், அல்லது சொல்லப்பட்ட ஹதீஸ்களுக்கும் பிற்பட்ட காலங்களில் வழங்கப்பட்டு வந்த விளக்கங்களில்தான், பெண்கள் அரசியலில் ஈடுபட முடியாது, நீதிபதிப் பதவியை வகிக்க முடியாது, ஏனைய தலைமைத்துவப் பொறுப்புக்களை வகிக்க முடியாது என்ற கருத்துருவாக்கம் இடம்பெற்றதை எமது அறிவுப் பாரம்பரியத்தை உற்று நோக்கும் எவரும் அறிந்து கொள்ளலாம்.

பெண்கள் இவ்வாறான பொறுப்புக்களை வகிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தமது அந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக பல்வேறு அல்குர்ஆன் ஆயத்களுக்கும் ஹதீஸ்களுக்குமான விளக்கங்களைக் கொண்டு வருகின்றனர். அவற்றில் மிக முக்கியமானதாக இந்த நிலைப்பாட்டில் உள்ளவர்களே கருதும் ஓர் அல்குர்ஆன் ஆயத்துக்கும் ஒரு ஹதீஸுக்குமான பொருத்தமான விளக்கம் என்ன என்பதை இங்கு சற்று சுருக்கமாக நோக்குவோம்.

1. அல்லாஹ் சிலரை இன்னும் சிலரை விட முன்னுரிமைப்படுத்தியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (மனைவியருக்காக) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (அந்நிஸாஃ - 34)

2. 'தமது விவகாரத்துக்குப் பொறுப்பாக ஒரு பெண்ணை நியமிக்கின்ற ஒரு சமூகம் வெற்றியடையவே மாட்டாது' (புகாரி)

மேற்கூறிய அல்குர்ஆன் ஆயத்தும், ஹதீஸும்தான் பெண்களது சமூகப் பங்கேற்புக்கும், பெண்கள் பொறுப்புக்களை வகிப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களால் அந்த நிலைப்பாட்டுக்கான முக்கியமான ஆதாரங்களாக முன்வைக்கப்படுகின்றன.

ஆண் பெண்ணின் நிர்வாகி என்று வந்திருக்கின்ற அல்குர்ஆன் ஆயத்தானது அத்தனை விளக்கங்களையும் தாண்டி நேரடியாக குடும்ப விவகாரங்களைக் கையாள்கின்ற ஆயத்தாகும். அந்த ஆயத்கள் இறங்கியதும் குடும்ப விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினை அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டுவரப்பட்ட போதுதான்.

குடும்ப ஒழுங்கை சீரமைப்பதற்கான வழிகாட்டல்களே இந்த ஆயத்தில் மிகத் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் நிர்வாகியாக ஆணை இந்த ஆயத் அடையாளம் காட்டுகின்றது. குடும்ப வாழ்வின் விவகாரங்களில் அந்த நிர்வாகப் பொறுப்பு ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான இரண்டு காரணங்களை இந்த ஆயத் அதன் தொடரில் சொல்வதைப் பார்க்கின்றோம்.

• சிலரை விட சிலரை முன்னுரிமைப் படுத்தியிருக்கின்ற விடயம்

• ஆண் செலவினங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற விடயம்.

இதில் குடும்ப நிர்வாகம் ஆணின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கான முதலாவது காரணமான 'சிலரை விட சிலரை முன்னுரிமைப்படுத்தியிருக்கின்றோம்' என்ற விடயமானது, திருமணத்தின் பின்னர் மனைவியாக வருகின்ற பெண்ணை விட கணவனான ஆண் தகுதியில் கூடியவனாக இருப்பதே குடும்பத்தை சீராக நடாத்திச் செல்வதற்கான வழி என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமானதாக அமைய முடியும். ஏனெனில் கணவனை விட மனைவி தகுதியில் கூடியவளாக இருக்கும் போது குடும்ப வண்டியை நகர்த்திச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. அத்தகைய பிரச்சினைகள் பலவற்றை நாம் அன்றாடம் சமூகத்தில் காண்கிறோம். எனவே திருமணத்தில் பொருத்தம் பார்ப்பதென்ற விடயத்தில், பொருளாதார ரீதியாக, அறிவு ரீதியாக, சமூக அந்தஸ்து ரீதியாக பெண்ணை விட ஆண் தகுதி கூடியவனாக இருப்பதை உறுதி செய்துகொள்வதானது குடும்பத்தை சீராக நடாத்திச் செல்வதற்கு துணை புரியக்கூடிய விடயமாகும்.

இரண்டாவது விடயம் மிகத் தெளிவாக அந்தத் தகுதியில் பொருளாதார ரீதியான தகுதியை வேறுபடுத்தி தனியான நிபந்தனையாகக் கூறுகின்றது. அதாவது, மிக முக்கியமாக எதன் காரணத்தினால் குடும்ப நிர்வாகப் பொறுப்பு ஆணுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை அது தெளிவுபடுத்துகின்றது.

எனவே இந்த இரண்டும் ஒருசேர ஓர் ஆணிடம் இருக்கும் போதுதான் அவன் வீட்டின் நிர்வாக அந்தஸ்தையே பெற்றுக் கொள்கிறான். ஆண் வெறுமனே ஆண் என்பதற்காக அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அல்குர்ஆன் எங்குமே சொல்லவில்லை.

மாற்றமாக இந்த இரு நிபந்தனைகளின் அடிப்படையில் தான் அந்தப் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவே இந்த ஆயத் தெளிவு படுத்துகின்றது.

குடும்ப விவகாரத்தில் பெண்களின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆண் தேசத்தின் நிர்வாகியாக வருவதற்கும், அல்லது ஏனைய பதவிகளை வகிப்பதற்கும் இதே அல்குர்ஆன் ஆயத்தான் ஆதாரமெனில் குடும்பத்தில் அவன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டதற்கான இரண்டு நிபந்தனைகளும் ஏனைய விடயங்களிலும் பொருந்திப் போக வேண்டும். அதாவது அவன் தன்னால் நிர்வகிக்கப்படுகின்ற அல்லது தனது தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டிய அனைவரையும் விட எல்லாவகையிலும் தகுதியில் கூடியவனாகவும், அனைவரது செலவினங்களையும் பொறுப்பெடுக்கக் கூடிய பொருளாதார பலம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் குடும்பத்துக்கு மட்டுமானவை என்றால் இந்த ஆயத்தை ஏனைய விடயங்களில் பிரயோகிக்க முடியாது. இந்த ஆயத் பொதுவாக அனைத்துக்குமானது என்றால் அதனோடினைந்த நிபந்தனைகளும் அனைத்து விடயங்களுக்கும் பிரயோகிக்கப்பட வேண்டும்.

இந்த ஆயத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 'நிஸாஃ' என்ற சொல் பொதுவாக 'பெண்கள்' என்ற கருத்திலல்லாமல் 'மனைவியர்' என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான சாத்தியப்பாடே அதிகம் இருக்கின்றது. பல இடங்களில் (ஸூறா அல்பகறா: 222, 231, 232, 236, ஸூறா ஆலு இம்றான்: 61, அந்நிஸா: 43, அல்அஹ்ஸாப்: 30,32, அத்தலாக்: 01) அல்குர்ஆன் நிஸாஃ என்ற சொல்லை மனைவியர் என்ற கருத்தில் பயன்படுத்தியிருப்பதை அவதானிக்கலாம். இந்த ஆயத் இறங்கியதன் பின்னணிக் காரணமும் அதன் போக்கும் அது சொல்லும் விடயங்களும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதே மிகவும் பொருத்தம் என்பதை உணர்த்தி நிற்கின்றன. பெண்கள் என்ற பொதுவான கருத்தில் அந்த சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று விளங்கிக் கொள்ளும் போது இஸ்லாத்தால் பெண்களுக்கு வழங்கப்பட்ட விடுதலையை மீளவும் பறித்துக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகளும், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம உரிமைகளின் எல்லைக் கோடுகளை சுருக்கிக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அதிகம் காணப்படுகின்றன.

பெண்களின் சமூக அரசியல் பங்கேற்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களால் மிகப் பலமான ஆதாரமாகக் கருதப்பட்டு முன்வைக்கப்படும் ஹதீஸ்தான் 'தமது விவகாரத்துக்குப் பொறுப்பாக ஒரு பெண்ணை நியமிக்கின்ற ஒரு சமூகம் வெற்றியடையவே மாட்டாது' என்ற ஸஹீஹான ஹதீஸாகும்.

இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்பதில் நாம் கருத்து முரண்படவில்லை. எனவே ஸஹீஹான இந்த ஹதீஸ் அல்குர்ஆனுக்கு முரண்பட முடியாது என்ற அடிப்படை விதியிலும் முரண்பாடுகள் வர முடியாது. ஏனெனில் ஸபஇன் அரசியைப் பற்றி அல்குர்ஆனில் வந்திருக்கின்ற வர்ணனைகள் யாவும் ஆண் பெண் வித்தியாசங்கள் தாண்டி யாரது தலைமைத்துவமும் ஒரு சமூகத்தை இம்மை மறுமை வெற்றியை நோக்கியும் வழிநடாத்த முடியும், இம்மை மறுமைத் தோல்வியை நோக்கியும் வழிநடாத்த முடியும் என்பதற்கான தெளிவான ஆதாரங்களாகும். ஆணாக இருப்பதால் சரியான தீர்மானங்களை மட்டுமே எப்போதும் மேற்கொள்வான் என்பதோ, பெண்ணாக இருப்பதால் பிழையான தீர்மானங்களை மட்டுமே எப்போதும் மேற்கொள்வாள் என்பதோ பக்கச் சார்பான புரிதலாகும்.

ஒரு பெண்ணால் வழிநடாத்தப்பட்ட ஒரு சமூகம் வெற்றியடைந்த வரலாரொன்றை அல்குர்ஆன் விலாவாரியாகக் கூறுகின்ற போது பெண்ணைத் தலைவராக நியமிக்கும் ஒரு சமூகம் வெற்றி பெறாது என்று ஹதீஸில் வந்திருப்பது வெளிப்படையான பார்வையில் அல்குர்ஆனது நிலைப்பாட்டுக்கும் ஹதீஸின் நிலைப்பாட்டுக்குமிடையிலான முரண்பாடாகவே பலருக்கும் தோன்றலாம். ஆனால் உண்மையில் இங்கு அல்குர்ஆனுக்கு முரண்படுவது இந்த ஹதீஸல்ல, மாற்றமாக இந்த ஹதீஸை இதற்கு ஆதாரமாக எடுப்பவர்கள் கொடுக்கும் விளக்கமே அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தபூக் யுத்தத்துக்குப் பின்னர் பல்வேறு மன்னர்களுக்கும் நபியவர்கள் இஸ்லாத்தின் அழைப்பை சுமந்த கடிதங்களை அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதங்கள் பெரும்பாலும் எல்லா மன்னர்களாலும் கண்ணியமாகவே கையாளப்பட்டன. ஆனால் பாரசீக மன்னன் கிஸ்ரா அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட போது அவன் அதனை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தான். அந்த செய்தி நபியவர்களுக்குக் கேள்விப்பட்ட போது 'அல்லாஹ் அவனது ஆட்சியையும் அவ்வாறே கிழித்தெறியட்டும்' என்று அவனுக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்தார்கள். அதே போன்று 'கிஸ்ரா மரணித்து விட்டானென்றால் இனி வேறு கிஸ்ராக்கள் வர மாட்டார்கள்' என்றும் நபியவர்கள் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.

இந்த நிகழ்வுகளின் பின்னரே கிஸ்ராவின் மரணச் செய்தியும் அவனது மகளின் பதவியேற்பும் நபியவர்களுக்குக் கேள்விப்படுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில்தான், ஏற்கனவே கிஸ்ராவின் செயலால் கோபமுற்று அவனுக்கெதிராகப் பிரார்த்தித்திருந்த, கிஸ்ராவின் மரணத்துக்குப் பின் வேறு கிஸ்ராக்கள் வரமாட்டார்கள் என்று முன்னறிவிப்புச் செய்திருந்த நபியவர்கள் தனது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும், தனது தீர்க்கதரிசனம் உண்மைப்படுத்தப்பட்டிருப்பதையும் மீள உறுதிப்படுத்தும் வகையில் 'ஒரு பெண்ணை தமது பொறுப்பாளராக நியமித்த ஒரு சமூகம் வெற்றி பெறவே மாட்டாது' என்று கூறினார்கள். ஏற்கனவே தோல்வியடைந்து சிதைந்து போகும் என்று அறிவிக்கப்பட்டதுதான் பாரசீக சாம்ராஜ்யம். அங்கு பெண் நியமிக்கப்பட்டதாலல்ல அந்தத் தோல்வியும் வீழ்ச்சியும், நபியவர்களின் சாபத்துக்கு ஆளான ஒரு சாம்ராஜ்யம் அந்த சாபத்தின் விளைவாக சந்தித்த தோல்விக்கான காரணத்தை ஒரு பெண்ணின் தலையில் கட்டி விடுவது அபத்தமானது.

எப்படியோ வீழ்ச்சியடையப் போகும் ஒரு சமூகம் இப்போது தமது பொறுப்பை ஒரு பெண்ணின் கரத்தில் ஒப்படைத்திருக்கின்றார்கள், ஆனால் அது அவர்களது வீழ்ச்சியை எவ்வகையிலும் தடுக்காது என்று விளங்க வேண்டிய, பாரசீக சாம்ராஜ்யத்தின் தோல்வியுடனும் வீழ்ச்சியுடனும் மாத்திரம் சம்பந்தப்பட்ட நபியவர்களின் வார்த்தைகளை பொதுமைப்படுத்தி விளக்கமளிப்பதன் மூலம் அவ்வாறு விளக்கமளிப்பவர்களே அல்குர்ஆனின் தெளிவான ஆதாரத்துடன் முரண்படுகின்றனர். எனவே ஒரு பெண் அரசியலில் ஈடுபட முடியுமா? தலைமைத்துவத்தை வகிக்க முடியுமா? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா இரண்டினதும் ஒளியிலேயே பெற வேண்டியிருக்கின்றது. அவ்வாறில்லாத போது பொருத்தமற்ற நிலைப்பாடுகளுக்கு நாம் வருவதைத் தவிர்க்க முடியாது போய் விடும்.

அவ்வாறே, பெண்கள் காழியாக வருவதில் உள்ள இன்னுமொரு ஷரீஅத் சார்ந்த சிக்கலாக அடையாளப்படுத்தப்படும் விடயம்தான், 'வலீ இல்லாத ஒரு பெண்ணுக்கு காழி வலீயாக வர வேண்டிய நிலை ஏற்படுகின்ற போது காழி பெண்ணாக இருந்தால் அவரால் வலீயாக வர முடியாதே' என்பதாகும். உண்மையில் நாம் இதுவரை கலந்துரையாடிய விடயங்களோடு ஒப்பிடும் போது இது பாரம் குறைந்த ஒரு விவகாரமாகும்.

இதற்கான பதில் மூன்று வகைகளில் அமையலாம்.

1. ஒரு பெண்ணுக்கு 'காழி' என்ற உயர்ந்த பொறுப்புக்கு வருவதற்கே ஷரீஅத்தில் தடை இல்லாத போது அவள் வலீ இல்லாத ஒருவருக்கு தற்காலிக வலீயாக கடமையாற்றுவதற்கு எவ்விதத் தடையும் இருக்க முடியாது.

2. ஒரு காழி வலீயாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் போது குறித்த காழி என்ற பதவி நிலைதான் அந்தப் பொறுப்பை சுமப்பதற்குத் தகுதியானவராக குறித்த நபரை மாற்றுகின்றதேயல்லாமல், அவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விடயமல்ல. உதாரணமாக நேற்று காழியாக இருந்து இன்று காழியாக இல்லாத ஒருவருக்கு அவர் ஆண் என்ற காரணத்தினால் மட்டும் மூன்றாம் நபர் ஒருவருக்கு வலீயாக வர முடியாது. எனவே குறித்த விடயம் பதவி நிலையால் கிடைக்கும் மேலதிக அந்தஸ்தும் பொறுப்புமாகும்.

3. காழியாக இருப்பவர் வலீயாகத் தொழிற்படுதல் என்பதன் அர்த்தம், 'குறித்த பெண்ணுக்கு வலீயாக வரக்கூடியவர் எவரும் இல்லை என்ற காரணத்தினால் காழி நீதிமன்றம், பொருத்தமான ஒருவரை வலீக்குப் பகரமாக ஏஜன்ட் ஆக நியமித்து அவரை குறித்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டவராக பிரகடனப்படுத்தும்' பத்திரத்தை காழியின் கையொப்பத்துடன் வழங்குவதாகவும் இருக்கலாம்.

இந்தப் பின்னணியில் பெண்கள் இத்தகைய பொறுப்புக்களுக்கு வருவதில் ஷரீஆ ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கே வர வேண்டியிருக்கின்றது.

எனவே பெண்கள் காழிகளாக நியமிக்கப்பட முடியுமா? என்ற கேள்விக்கு 'முடியாது' என்று பதிலளிப்பதாயின் அதற்கான நியாயமாக 'இது ஷரீஅத்துக்கு முரண்' என்ற வாதம் முன்வைக்கப்பட முடியாது என்பது தெளிவு.

Affan Abdul Haleem
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe