Ads Area

காரைதீவு குப்பைகளை அட்டாளச் சேனையில் கொட்ட அனுமதிக்காவிட்டால் கல்முனையில் கொட்ட வேண்டி வரும்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு காரைத்தீவு பிரதேச சபை சுமார் 15 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதால் எமது சபைத் தீர்மானத்தின் படி அவர்களது குப்பைகளை இனிமேல் நாம் எமது பகுதியில் கொட்ட அனுமதிக்க மாட்டோம் என அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எ.எல்.அமானுல்லா நபீல் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் நடைபெற்ற தவிசாளர்களுக்கான கூட்டத்தில் எ.எல்.அமானுல்லா நபீல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பதிலளிக்கையில், தவிசாளர் அமானுல்ரா குறிப்பிடுவது உண்மை. அதேபோல் எமது சபைக்கு கல்முனை மாநகர சபை சுமார் 30 இலட்சம் ரூபாய் தரவேண்டும். அதைத் தந்தால் அட்டாளைச்சேனைக்கு மறுகணமே 15 இலட்சம் ரூபாவை வழங்க முடியும்.

அதற்காக கல்முனை மாநகர சபைக்கு பலதடவைகள் கடிதம் போட்டு சபைத் தீர்மானம் எடுத்து அதனையும் மேயர் முதல் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பி எவ்வித பதிலும் வராத காரணத்தினால் இறுதியில் மேயரைச் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

இதன்போது அங்கு இதுதொடர்பாக எவ்வித ஆவணமும் இல்வை என்று பதிலளித்தார். அப்படியெனில், அங்கு மாநகர சபை நடக்கிறதா? மார்க்கட் நடக்கிறதா? என்று கேட்க விரும்புகிறேன்.

எனவே, அட்டாளைச்சேனையில் எமது குப்பைகளைக் கொட்ட தடைவிதித்தால் எமது குப்பைகளை கல்முனை மாநகர சபையில் கொட்ட வேண்டிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe