காரைதீவு சகா.
தங்கம்-வெள்ளி என பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் சம்மாந்துறை இளம் விஞ்ஞானி வினோஜ்குமார்.
இவ்வருடம் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை கோரக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமாரின் 11 கண்டுபிடிப்புகளில் 05 கண்டுபிடிப்புகளுக்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வருடத்துக்கான தேசிய மட்ட கண்டுபிடிப்புப் போட்டி கடந்த 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
ஒரு தங்கப் பதக்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் மூன்று வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. தங்கப் பதக்கத்திற்கு 1 இலட்சருபா பணப்பரிசும் வெள்ளிப் பதக்கத்திற்கு 50ஆயிரம் ருபா பணப்பரிசும் வெண்கலப் பதக்கங்களுக்கு தலா 30ஆயிரம் ருபா வீதம் 90ஆயிரம் ருபா பணப்பரிசும் கிடைக்கப் பெற்றது.
அதன்படி இம்முறை மாணவன் சோ.வினோஜ்குமார் 2இலட்சத்து 40ஆயிரம் ரூபா பணப் பரிசையும் பதக்கங்களையும் சுவீகரித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பத்தை பயின்று வரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைப் பிரிவு பல்கலைக்கழக மற்றும் மூன்றாம் கல்வி நிலையங்கள் வர்த்தகப் பிரிவு,திறந்த பிரிவு என நான்கு பிரதான பிரிவுகளையும் பதினான்கு தொழினுட்ப பிரிவுகளையும் கொண்டதாக போட்டி நடைபெற்றது.
அகில இலங்கை ரீதியான இப்போட்டிக்கு மாகண மட்டப் போட்டிகளிலிருந்து கண்டுபிடிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப் போட்டிகள் நடைபெறுவது வழமையாகும்.