Ads Area

எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள் - இலங்கை அகதிகள்.

இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது நாங்கள். குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள் என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா குடியேறிய இந்து, சீக்கியர், பௌத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசு குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லீம்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோர் குடியுரிமை சட்ட திருத்த பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வாழ் இலங்கை அகதிகளை குடியுரிமை பட்டியலில் சேர்க்காதது குறித்து முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கபட்டநிலையில், பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது என்று அவர்கள் கவலை கொள்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நான்கு இலங்கை அகதிகள் முகாம் உள்ளது இந்த முகாம்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இதில் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மட்டும் 169 குடும்பங்கள் என மொத்தம் 525 பேர்கள் வசித்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டு இந்தியா வந்த இவர்கள் கடந்த 30ஆண்டுகளாக இங்கே வசித்து வருகின்றனர்.

''இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது'' என்று கூறுகின்றனர் இங்கே வசிக்கும் இலங்கை அகதிகள்.


குறிஞ்சிப்பாடி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குணரத்தினம், குடியுரிமை பட்டியலில் இந்தியா வாழ் இலங்கை தமிழர்கள் இடம் பெறாதது குறித்து கூறும்போது, "1990ல் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தோம், நங்கள் வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் இதுவரையிலும் அகதிகளாகதான் இருக்கிறோம் இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். நான் இங்கே வரும்போது எனது வயது 19. இங்கே வந்த பிறகு நான் திருமணமாகி எனது குழந்தை வளர்ந்து இப்போது 25 வயதில் எனது மகன் இருக்கிறான். எங்களது காலம் தான் ஓடிவிட்டது.

ஆனால், எங்களது பிள்ளைகள் இங்கேயே பிறந்து, வளர்ந்து பட்டங்கள் பெற்றும் அவர்களால் சரியான வேலைக்கு போகமுடியாமல், கூலி வேலைகளுக்கு போக வேண்டிய நிலை இருக்கிறது, குடியுரிமை இல்லாததால் அவர்களால் மற்றவர்களை போல அரசாங்க வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே அரசானது மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை தருவதாக சொன்னது போல எங்களுக்கும் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது," என்கிறார்.

குடியுரிமை குறித்து பேசிய சரோஜாதேவி என்ற பெண், "இலங்கையில் வேதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் நாங்கள் இந்தியா வந்துவிட்டோம். 29வயதில் இங்கே வரும்போது இரண்டு குழந்தைகளுடன் வந்தேன் இப்போது எனது வயது 59 ஆகிவிட்டது.


எனது பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். எங்களுக்கு குடியுரிமை வழங்கினால் என் பிள்ளை மற்றும் பேரப்பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கை நலமாக இருக்கும். நாங்களும் தமிழர்கள் தான் இலங்கையில் இருந்தால் எங்களை இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகின்றனர்.
இதுபோன்ற சூழலில் நாங்கள் எங்கே தான் செல்வது," என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய 65 வயது உடைய ஸ்ரீரங்கம்மாள் சொல்லும்போது, "எனது தந்தை இங்கே பிறந்தவர், இந்தியா எங்களது தாய்நாடு என்று நம்பி தான் இங்கே வந்திருக்கிறோம். இலங்கை சென்று வாழ்வதற்கு எங்களுக்கென்று எதுவுமில்லை பிறகு எங்களால் அங்கே சென்று எப்படி வாழமுடியும்.

நாங்கள் பள்ளிக்கூடம் சென்றாலும் அகதி, மருத்துவமனை சென்றாலும் அகதி, வேலைகளுக்கு சென்றாலும் அகதி, எங்கே சென்றாலும் எங்களை பயத்தோடு பார்க்கின்றனர். நாங்கள் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதை எங்களால் நிரூபிக்க முடியும் ஆகவே எங்களுக்கு குடியுரிமை கட்டாயம் வேண்டும் இதற்காக தான் 30 ஆண்டுகால இங்கே காத்திருக்கிறோம் அப்படி எங்களுக்கு குடியுரிமை கொடுக்க முடியாதென்றால் எங்கள் அனைவரையும் கப்பல் மூலமாக கடலில் தள்ளி விட்டுவிடுங்கள்," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் பொறியியல் படிப்பை முடித்த இளைஞர் கீர்த்திகன்(வயது 25) குடியுரிமை இல்லாமல் தாங்கள் படும் பிரச்சனை குறித்து சொல்லும்போது, "நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இந்தியா தான், இங்கே நான் ஒரு இந்தியனாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.


ஆனால் இங்கே படிப்பை முடித்த என்னால் படிப்பிற்கு தகுந்த வேலைக்கு செல்ல முடியவில்லை. அப்படியே எதாவது கிடைக்கும் வேலைகளுக்கு சென்றாலும் குறைந்த சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் எங்களுக்கான அடையாள கிடைக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தோம் ஆனால் எங்களை பட்டியலில் சேர்க்காமல் இருந்தது பெரும் ஏமாற்றம் மற்றும் கஷ்டமா இருக்கிறது. எங்களை போன்ற இளைஞர்கள் இலங்கை சென்று வாழ வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் தோன்றியதில்லை.

இந்தியாவிலே பிறந்து, இந்த கலாசாரத்தில் ஒத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு, இங்கயே குடியுரிமை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe