குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இநிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம் சிஏஏ ஆதரவாளர்களின் போராட்டங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.
கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். முக்கியமாக வடகிழக்கு டெல்லியில் அதிக அளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் சிஏஏ போராட்ட வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கலவரத்தை முதலில் யார் தொடங்கியது என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர் தரப்பு இரண்டும் கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதேபோல் போலீசாரும் கல் வீசி தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
இன்று காலையும் விடாமல் கலவரம் நடந்து வருகிறது. டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்தது. அங்கிருக்கும் கடைகள், வீடுகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் இன்னும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நேற்று மொத்தமாக கலவரம் வெடித்தது. மவ்ஜ்போர், கார்வால் நகர், மவ்ஜ்போர் சவுக், பாபர்பூர், சாந்த் பாக் ஆகிய இடங்களில் மோசமாக கலவரம் வெடித்தது. இதனால் டெல்லி சிஏஏ போராட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் 10 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று இரவு முழுக்க ஜாபர்பேட் மொத்தமாக கொளுந்துவிட்டு எரிந்தது. இரவு முழுக்க டெல்லியில் கலவரம் நடந்தது. இதையே எப்படி கட்டுப்படுத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. நேற்று இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை செய்தார். இதில் போலீஸ் உயர் அதிகாரிகள், பாரா மிலிட்டரி அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.