புதுடெல்லி,
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் யாஃபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு தலைமைக்காவலர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
இணை போலீஸ் கமிஷனர்லோக் குமார் கூறியதாவது:-
நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், பிரஹம்பூரி, மவுஜ்பூர், சந்த் பாக் மற்றும் பிற பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். எந்தவொரு கூட்டம் வந்தாலும் அதை நாங்கள் கலைக்கிறோம், சமாதானக் குழுக்கள் அமைதியைக் காக்க மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என கூறினார்.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் பேசும் போது கூறியதாவது:-
கூட்டத்தில் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வன்முறையில் ஈடுபடும் மக்கள் வெளியில் இருந்து வருவதாகக் கூறியுள்ளனர். எல்லைகளை முத்திரையிட்டு தடுப்பு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
போலீசார் கடுமையான பற்றாக்குறையாக இருப்பதாகவும், மேலிருந்து உத்தரவுகளைப் பெறும் வரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எம்.எல்.ஏக்கள் எனக்குத் தெரிவித்து உள்ளனர். இந்த பகுதிகளில் போலீசாருடன் சமாதான அணிவகுப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொண்டுள்ளேன்.
காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவ உதவிகளை வழங்குமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை சரியான நேரத்தில் அடையுமாறு தீயணைப்புத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.