மார் 30 , 2020
அன்புடையீர்,
கொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு.
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரைக் குளிப்பாட்டுவது, கபன் செய்வது, தொழுகை நடாத்துவது மற்றும் அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். பர்ளு கிபாயா என்பது, இவற்றை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டால் போதுமானது. அவ்வாறு யாரும், அக்கடமைகளை நிறைவேற்றாவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் பாவிகளாக ஆகிவிடுவார்கள்.
என்றாலும், சில மார்க்க அறிஞர்கள், ஜனாஸாத் தொழுகையின் நோக்கம், மரணித்தவருக்கு துஆ செய்வதாகும். அவ்வாறே, ஜனாஸாவுடைய நான்கு கடமைகளில் சில கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதால், நிறைவேற்ற முடியுமான கடமைகளை விட்டு விட முடியாது என்று கூறுகின்றனர். இதற்கு “ஒரு காரியத்தில் இயலாத சில விடயங்களுக்காக இயலுமான விடயங்களையும் சேர்த்து விட்டுவிட முடியாது” எனும் அடிப்படையை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
இவ்வடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணித்த ஒருவரது உடலிலிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல் முற்றுமுழுதாக பையினால் மூடப்படும். எனவே, அதைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
கொரோனா மூலம் மரணிக்கும் ஒருவரின் இறுதிக் கிரியைகள் விடயத்தில் அரசாங்கம் சில நடைமுறைகளைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அவற்றில், மரணித்தவரது ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது, ஜனாஸாவை எரித்தல் வேண்டும், அடக்குவதாக இருந்தால், ஆறு அடிகள் ஆழமாக கப்ரு இருத்தல் வேண்டும், அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படல் வேண்டும், மிகவும் நெருங்கிய ஒரு சில உறவினர்களே அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு அனுமதிக்கப்படல் வேண்டும், பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்தல் வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் உள்ளன.
மேற்குறிப்பிட்ட மார்க்க சட்டத்தின் அடிப்படையில், மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாது என்பதால் தொழுகை மாத்திரம் நடாத்தி அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், அதிக நபர்கள் ஒன்று சேராமல், முக்கிய சிலர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கும் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். மற்றவர்கள் இவ்வாறான நிர்ப்பந்த நிலையில் மறைமுக ஜனாஸாத் தொழுகையை தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
குறிப்பு : இத்தகைய ஜனாஸாக்களை அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், மையவாடியில் பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்வதற்கு ஒத்துழைக்குமாறு மஸ்ஜித் நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
செய்தி மூலம் - https://acju.lk/news-ta/acju-news-ta/item/1883-2020-03-30-17-52-17?fbclid=IwAR0d4LlSWAx4zHKQsy4qZXKiOr5tqXpBYIk8JteE1WDT8lgvDiTIbj4KBuM
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா