டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா 2012-ம் ஆண்டு கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்பயா சிகிச்சைப் பலனின்றி உயிரிந்தார். அதுதொடர்பான வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் நாளை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருக்கிறது. குற்றவாளிகள் நால்வரில் முகேஷ் குமார் சிங், அக்ஷய் குமார், வினய் குமார் சர்மா ஆகிய மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
தங்கள் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27-ந்தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தவறானது என்றும் தன்னுடைய கருணை மனு தவறான அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
News18 Tamil Nadu