தமிழர்களை துடிக்கத் துடிக்க இனக்கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு பொது மன்னிப்பு வழங்குவது, படுகொலை அநீதிகளுக்கு இலங்கையில் நீதி கிடைக்காது என்பதையே உணர்த்தியிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
சுனில் ரத்நாயக்க கடந்த 2000ஆம் ஆண்டில் மிருசுவில் பகுதியில் வைத்து மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களை துடிதுடிக்க இனக்கொலை செய்தவர். அப்பாவி மக்களை துடிதுடிக்க அவர் செய்த கொலைக் குற்றங்களை கண்டு தமிழர்கள் மாத்திரமல்ல இதயமுள்ள சிங்கள மக்களே துடிதுடித்தனர். அத்துடன் இவருக்கு இலங்கை உயர் நீதிமன்றமே மரண தண்டனையை வழங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு கொரோனா அச்சத்தினால் பீதியில் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தனது சர்வாதிக்காரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அவர்களை மிகவும் காயப்படுத்தக்கூடியது. மேலும் இலங்கை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை ஜனாதிபதி மீறுகின்ற செயற்பாடு, இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இலங்கை நீதித்துறை மீதான நம்பிக்கையின்மை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
இராணுவம் இழைத்த குற்றங்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாடுகளில் இலங்கை நீதித்துறை தொடர்ந்தும் தோல்வி அடைந்து கொண்டே வருகின்றது. கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட திருமலை மாவட்டத்தின் குமாரபுரம் படுகொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதைப்போல திருமலை ஐந்து மாணவர் படுகொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். மூதூர் அக்சன் பாம் தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் குற்றவாளிகள் தப்ப அரசால் வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழ் மக்களை படுகொலை செய்யும் குற்றவாளிகளுக்கே இராணுவத்திலும் பாதுகாப்பு அமைச்சிலும் உயர் பதவிகளும் கௌரவங்களும் வழங்கப்படுகின்றது. இதன் ஊடாக தொடர்ந்தும் தமிழின அழிப்பை இலங்கை அரசு தூண்டுகின்றதா? சுனில் ரத்நாயக்காவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதன் வாயிலாகவும் இத்தகைய ஒரு செயலிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஈட்டுள்ளார்.
இதன் காரணமாகவே இலங்கைக்குள் நீதி கிடைக்காது, சர்வதேச விசாரணை ஒன்றின் வாயிலாகவே வரலாறு முழுவதும் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்கும் என்றும் தமிழ் மக்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.