Ads Area

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிலைவரம் குறித்து வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் அவர்களை நாம் இன்று நேரடியாக சந்தித்து உரையாடியபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

"எமது வைத்தியசாலைக்கு அன்றாடம் பெருந்தொகையான நோயாளர்கள் சிகிச்சை பெற வந்து கொண்டிருந்தனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது நோயாளர்களின் வரவு வெகுவாக குறைந்துள்ளது. அவ்வாறாயின் தற்போது நோயாளிகள் எங்கே போகின்றனர்? என்ன செய்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது.

இன்றைய சூழ்நிலையில் அவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற அச்சப்படுகின்றனர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது இருமல், தடிமல், காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு சென்றால், பொலிசுக்கு அறிவித்து, கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் வைத்தியசாலைக்கு வராதிருப்பதாக அறிய முடிகிறது.

இது தேவையற்ற பயமாகும். கொரோனா தொற்று அறிகுறியில்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள். இந்த பீதி காரணமாக பெரும்பாலானோர் காய்ச்சலுக்கு பனடோல் போட்டுக் கொண்டு வீட்டில் இருந்து விடுகின்றனர். பொதுவாக எந்த நோயானாலும் அவ்வப்போது மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் மருந்துகளை பாவிப்பது அல்லது பனடோல் போடுவது என்பது மிகவும் ஆபத்தான விடயமாகும். சிறிய நோய்களுக்குக் கூட உரிய நேரத்தில் சிகிச்சை செயப்படா விட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். சிலவேளை உயிராபத்தைக் கூட ஏற்படுத்தலாம். நோய் முற்றிய நிலையில் வைத்தியசாலையை நாடுவதில் பயனில்லாமல் போகலாம். இது வைத்தியசாலைக்கும் சவாலான விடயமாக மாறி விடுகிறது.

அதேவேளை எவராயினும் தமது நோய் தொடர்பில் உண்மையான தகவல்களையே தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்படா விட்டால் அவர்கள் உயிராபத்தை எதிர்நோக்குவதுடன் சமூகத்திலும் கொரோனா வைரஸ் பரவலுக்கான சூழல் ஏற்பட்டு விடும் என்பதை சம்மந்தப்பட்டோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையிலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று அச்சத்திற்கு மத்தியிலும் எமது வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.

இங்கு சிகிச்சைக்காக வருகின்ற மக்களினதும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களினதும் நலன் கருதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு வழமை போன்று தினசரி காலை 7.00 மணி தொடக்கம் இரவு 8.00 வரை இயங்கி வருகின்றது. அவசர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது. இருமல், தடிமல், காய்ச்சல் போன்ற நோய்களுடன் வருவோர் விசேட கவனிப்புடன் பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்கான மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏனைய நோயாளிகளுக்கும் வழமை போன்று சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

நோயாளிகள் வைத்தியசாலை வருவதற்கு ஊரடங்கு சட்டம் ஒரு தடையல்ல. அவசரமாக வாகனம் ஏதும் கிடைக்கா விட்டால், 1990 எனும் அவசர இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அம்பியூலன்ஸ் வண்டி விரைந்து வந்து, நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகையினால் நோய்வாய்ப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் எவ்வித தயக்கமும் காட்ட வேண்டாம் என்று வலியுறுத்துவதுடன், மக்களை பாதுகாப்பதற்காகவே சுகாதாரத்துறையும் பொலிஸ், முப்படையினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe