கொரோனா பாதிப்பு காரணமாக 12 நாடுகளில் சிக்கியுள்ள சுமார் 14,800 இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் மீட்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
ஐக்கிய அரசு நாடுகளில் சிக்கியிருக்கும் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சிக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. குவைத்தில் இருந்து சென்னை திரும்ப 19 ஆயிரம் ரூபாயும், துபாயில் இருந்து சென்னை திரும்ப 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.