யாழில் நிவாரண உதவியாக 60 ரூபா பெறுமதியான பாணை கொடுத்துவிட்டு அரசியல்கட்சி ஒன்று அதனை புகைப்படம் எடுத்து தமது முகப்புத்தகத்தில் வெளியிட்டதால் யுவதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கட்சியின் ஆதரவாளர்கள் யாழில் குறித்த இடம் ஒன்றில் கொடுத்த பாணை, அப்பகுதியில் கால் நடக்க இயலாது இருந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதற்காக யுவதி ஒருவர் அந்தப் பாணை வாங்கியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததால் கடைகளுக்கும் செல்ல முடியாத நிலையிலேயே யுவதி அந்த வயோதிபப் பெண்ணுக்கு பாணைப் பெற்றுக் கொடுப்பதற்காக உதவியுள்ளார்.
இவர்கள் யுவதியிடம் பாணைக் கொடுத்துக் கொண்டிருந்த போது யுவதியையும் யுவதியுடன் பாண் வாங்க நின்றிருந்த ஏனைய மக்களையும் வாகனத்தின் மேற் பகுதியில் இருந்து கைத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அந்தப் புகைப்படங்களை அவர்கள் தமது கட்சியின் முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
குறித்த புகைப்படங்கள் வெளியாகி இரு வாரங்களில் குறித்த புகைப்படச் சர்ச்சையால் விரக்தியுற்ற யுவதி தற்கொலைக்கு முயன்று காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இது தொடர்பாக புலம்பெயர் நாட்டில் உள்ள யுவதியின் அண்ணன்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இவ்வாறு உதவி செய்து புகைப்படங்கள் வெளியிடுபவர்கள் தொடர்பாக பெரும் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.
யுவதி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பின்னரே குறித்த புகைப்படங்கள் முகநுால் பக்கத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் இக்கட்டான காலகட்டத்தில் மனிதாபிமான உதவிகள் செய்யும் நல் உள்ளங்கள் தயவு செய்து உங்களிடம் உதவி பெறுபவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றாதீர்கள், உங்களிடம் உதவி பெறுபவர்களுக்கும் மானம்-மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
யாழ் இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த இந்தச் செய்தியை விழிப்புணர்வுக்காக இங்கே பதிவேற்றியுள்ளோம்.