வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையானது கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவந்த இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்போது முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டமாக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் மே 26 முதல் தொடங்கும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் அட்டவணைப்படி, முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 2 ஆம் தேதி கோவைக்கு ஒரு விமானமும், இரண்டாவதாக துபாய் விமான நிலையத்திலிருந்து ஜூன் 3 ஆம் தேதி திருச்சிக்கு ஒரு விமானமும், மூன்றாவதாக ஜூன் 4 ஆம் தேதி மதுரைக்கு ஒரு விமானமும், கடைசியாக ஜூன் 8 ஆம் தேதி சென்னைக்கு ஒரு விமானமும் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தை சார்ந்த மொத்தம் 81 விமானங்கள் மூலம் நடைபெற இருக்கும் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் உலகளவில் இருக்கும் சுமார் 14,000 இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.