(எம்.எம்.ஜபீர்)
முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது, அந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாக அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து அந்தப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை விடவும், அரசாங்கத்தின் உள்ளே இருந்து பேசுவது - மிகவும் சௌகரியமானது என, இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் - தான் கூறியதை திரிவுபடுத்தி, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
'நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து அமையவுள்ள - பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் என்று - நான் கூறியதாக, மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட நேர்காணலில்; பொதுஜன பெரமுன கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 105க்கும் 110க்கும் இடையிலான ஆசனங்களை மட்டுமே பெறும் என நான் கூறியிருந்தமையை, பொய்யான செய்திகளைப் பரப்புவோர் குறிப்பிடத் தவறி விட்டனர். அதாவது, பொதுஜன பெரமுன கட்சியினால் ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதை, அந்த நேர்காணலில் நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக அரசாங்கமொன்றை அமைக்கும். அந்த அரசாங்கத்தில் பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்' என்றார்.