Ads Area

பொது இடங்களில் முகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுவர்; வைத்தியர் சுகுணன்

பாறுக் ஷிஹான்

பொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பிராந்திய எல்லைக்குட்பட்ட பொதுச்சந்தைப்பகுதி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அண்மையில் (09-07-2020) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் முகக்கவசம் இன்றி நடமாடியவர்களை எச்சரிக்கை செய்த பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது கருத்து தெரிவித்த அவர்;

சுகாதார நடைமுறையுடன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தலை பொதுமக்கள் பின்பற்றுவது மிக அவசியமாகும்.
எதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்புகளை தர முன்வர வேண்டும்.கொவிட் 19 அச்சுறுத்தல் தொடர்ந்து எமது நாட்டில் காணப்படுவதனால் சுகாதார நடைமுறைகளை ஒவ்வொரு பொதுமகனும் பின்பற்றுவது அவசியமாகும்.

எனவே இவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.கொவிட் 19 அச்சுறுத்தலில் இருந்து எவ்வாறு எமது பாதுகாப்பை நாம் முன்னெடுப்பது என பல்வேறு விளக்கங்களை வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை தெளிவு படுத்தினார்.

இதன் போது இந்நடவடிக்கையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். றிஸ்வின் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா அச்சுறுத்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெளிவு படுத்தியதுடன் சமூக இடைவெளி பேணல் கைகளை கழுவுதல் வசதிகளை ஒழுங்குபடுத்துதல் முகக்கவசம் அணிதலின் அவசியம் குறித்தும் அறிவித்ததுடன் முகக்கவசமின்றி நடமாடியவர்களின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe