Ads Area

நேரசூசி வழங்கப்படாத ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரத் தேவையில்லை.

(காரைதீவு நிருபர் சகா)

பாடசாலை அதிபரினால் கடமைப்பட்டியல் (List of duties) வழங்கப்படாத ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரத்தேவையில்லை என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார். 

கொரோனா விடுமுறைக்குப்பின்னர் மாணவர்கள் வருகையுடன் தற்போது நாட்டிலுள்ள பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளதால் ஆசிரியர்களின் வருகை தொடர்பாக அதிபர் ஆசிரியர் மத்தியில் தெளிவின்மைகள் நிருவாக முரண்பாடுகள் ஏற்படத்தொடங்கியுள்ளன. இது தொடர்பாக மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: 

கல்வியமைச்சின் 2020.07.01 ஆம் திகதி சுற்றுநிருபத்தில் இந்த விடயம் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கல்வியமைச்சினால் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 10ஆம் 22ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட வழிகாட்டல் சுற்று நிருபங்களுக்கு மேலதிகமாக இப்புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜூலை 6 முதல் 24 வரையான பாடசாலைக் காலப்பகுதியில் பாடசாலையில் ஆட்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் முகமாக யார் யாரெல்லாம் பாடசாலைக்கு வரவழைக்கப்படலாம் என்பதை தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. அதாவது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்காக நேரசூசி (Time table) வழங்கப்பட்டவர்கள் மற்றும் நிருவாக சுகாதார பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பாடசாலைக்கு வரவழைக்கப்படவேண்டும். அவர்கள் காலை 7.30 மணிக்கு சமுகமளித்து தனது கற்பித்தல் செயற்பாடு முடிந்தவுடன் வெளியேற முடியும். அதற்கு அதிபர்கள் அனுமதியளித்தலவசியம். 

இந்தக்கட்டத்தில் எந்தப்பொறுப்பும் அல்லது நேரசூசி ஒப்படைக்கப்படாத ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரவழைக்கப்படக்கூடாது. எனினும் பாடசாலை 3ஆம் கட்டமாக ஆரம்பிக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அனைத்து ஆசிரியர்களும் காலை 7.30மணிக்கு கட்டாயம் சமுகமளிக்கவேண்டும். பி.ப 1.30மணிவரை பாடசாலையில் தரித்துநிற்கவேண்டும். 

நேரசூசி வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் பி.ப. 3.30மணிவரை பாடசாலையில் நிற்கவேண்டும்.அதேபோன்று ஆசிரியர்களின் வருகை வெளியேறல் என்பன பொது 18 புத்தகத்தில் கட்டாயம் பதியப்படல்வேண்டும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe