Ads Area

கிழக்கு தொல்பொருள் ஆய்வுக் குழுவினை எதிர்த்து மட்டக்களப்பில் சத்தியாக்கிரப் போராட்டம்.

அதிமேதகு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் ஆய்வுக் குழுவிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் எதிர்வரும் 2020.07.11ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஒரு நாள் அமைதிவழி சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சத்தியாக்கிரக ஏற்பாடு தொடர்பில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவிக்கையில்,

இவ் ஆய்வுக் குழுவினை அதிமேதகு ஜனாதிபதி அவர்களே நியமித்திருந்தார். இதில் தமிழர்களோ முஸ்லீம்களோ அங்கத்தவர்களாக உள்வாங்கப்படவில்லை. ஒரு தேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு.

தமிழர் அல்லாதவர்கள் நியமிக்கப்படும் போதே மர்மம் தோன்றப் போகின்றது என்பதை நாம் அறிந்திருந்தோம். பேராசிரியர் பத்மநாதன், கலாநிதி சிவகணேசன், போராசிரியர் மௌனகுரு போன்றோர் இக்குழுவில் சேர்க்கப்படாதது ஏன்?

தமிழர்களின் நிலங்களையும், அவர்களின் இருப்புகளையும் இல்லாதொழிக்கும் செயற்பாடே இக்குழுவின் நோக்கமாகும்.

கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக இந்த அரசு ஒரு பெண்மணியை நியமித்திருக்கின்றது. அந்தப் பெண்மணியின் ஆட்டங்களில் ஒன்று தான் இது. அந்தப் பெண்மணியால் கல்குடாவில் ஒரு சிங்களப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது மட்டக்களப்பிற்கும் பரவலாம். எனவே தமிழ் பேசுபவர்கள் ஆரம்பத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கும் விதமாகவும், ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுக் குழுவினை எதிர்க்கும் முகமாகவும் எதிர்வரும் 2020.07.11ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைதிவழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நாம் நடாத்த இருக்கின்றோம். இதில் உணர்வுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

Battinews.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe