நூருல் ஹுதா உமர்
தாம் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது கூட்டங்களில் பேசி வருகின்றார். ஆனால் அவரது பேச்சு உண்மையானதல்ல. அது முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான தந்திரமான பேச்சு என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கிழக்கு மாகாண சபையின் கீழ் சுற்றுலாப் பணியகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, வீடமைப்பு அதிகார சபை, முன்பள்ளிப் பணியகம் எனப் பல நியதிச்சட்ட அமைப்புகள் உள்ளன. கடந்த எமது நல்லாட்சி அரசு காலத்தில் எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாம் இவற்றுக்கு தவிசாளர்கள் நியமித்திருந்தோம்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைப் பணியகத்தில் தவிசாளர்ää மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர்கள் எனப் பதவிகள் இருக்கின்றன. இவற்றுக்கான நியமனங்களை ஏற்கனவே அரசு வழங்கியுள்ளது. இந்தப் பதவிகளில் ஒரேயொரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். எந்தவொரு முஸ்லிமும் நியமிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பொது முகாமையாளராக முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மூன்று ஆளுநர்கள் அவரது திறமையைப் பயன்படுத்தி சுற்றுலாவை அபிவிருத்தி செய்தனர். இன்று அவர் எவ்வித காரணமும் இன்றி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
அப்பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றிருந்தால் அவரை வேறு ஒரு இடத்துக்கு இடமாற்றி இருக்கலாம். ஆனால் இந்த அரசு அகற்றியே விட்டது. அதுவும் இந்த தேர்தல் காலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலர் எனது கவனத்துக்கு கொண்டு வருகின்றார்கள். இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை விடுகின்றனர். மொட்டுக்கு ஆதரவளித்த முக்கியஸ்தர்கள் கூட இவை போன்ற நடவடிக்கைகளால் கவலை கொண்டுள்ளதோடு எனக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் முஸ்லிம் தலைமை, முஸ்லிம் வேட்பாளர்கள் என சிலர் இருக்கின்றார்கள். அவர்களால் இது போன்ற விடயங்களைக் கதைக்கவோ முன்கொண்டு செல்லவோ முடியாது. அவர்களெல்லாம் வரையறைக்குள் தான் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமைகளை நாட்டிலுள்ள சகல முஸ்லிம் மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். வாக்களிக்குமுன் ஒருமுறை சிந்திக்க வேண்டும். இது போன்ற புறக்கணிப்புகளில் இருந்து சமுகம் மீட்சிபெற ஐக்கிய மக்கள் சக்தியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.