ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என்றால் நம்புவீர்களா… ஏதோ சதுரங்க வேட்டை பாணி மோசடி என ஒதுங்கித்தானே போவீர்கள்… ஆனால் பிலிப்பைன்சில் உண்மையிலேயே ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசமாக கிடைக்கிறது.
நம் ஊரில் கார் வாங்கினால் அதிகபட்சம் காப்பீடுதான் இலவசமாக கிடைக்கும். ஆனால் பிலிப்பைன்சில் ஒரு கார் வாங்கினால் இன்னொரு காரே இலவசமாக கொடுக்கின்றார்கள். அதிகமாக விற்பனையாகாத மசாலா பாக்கெட்டை எப்படியாவது வாடிக்கையாளர் தலையில் கட்டி விடுவதற்காக ஒரு குழம்பு மசாலா பாக்கெட் வாங்கினால் ஒரு சாம்பார் பொடி பாக்கெட் இலவசம் என தூண்டில் போடுவது நம் ஊரில் பழைய வியாபார தந்திரம்தான். ஆனால் பிலிப்பைன்சில் கொரோனாவால் ஆமை வேகத்தில் மந்தமாக உள்ள கார் விற்பனையை கியர் போட்டு வேகப்படுத்த இதே தந்திரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
பிலிப்பைன்சில் ஹூண்டாயின் Santa Fe சொகுசுக் காரின் விலை இந்திய மதிப்பில் 38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய். இந்த காரை வாங்கினால் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Reina Sedan கார் இலவசமாக கிடைக்கும். இந்த கார் இல்லாவிட்டால், ஆஃபரைப் பொறுத்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Accent கார் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது விலை கொடுத்து வாங்கும் sanda fe காரின் விலையில் மூன்றில் ஒரு பங்கு மதிப்பில் இன்னொரு கார் கிடைக்கும். லட்சக்கணக்கில் பணம் இருப்பவர்களுக்கு இந்த இலவச கார் ஆபர் என்றால் சில, பல ஆயிரங்களில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கும் அட்டகாசமான ஆபர்களை பிலிப்பைன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.