ஐக்கிய அரபு ராஜ்ஜிய ராஸ் அல் கைமா அல் கெயில் பகுதியில் தனது 13 வயது வயது நண்பருடன் காரில் வெளியே சென்ற 12 வயது சிறுவன், கார் விபத்தில் சிக்கியதால் உயிரிழந்திருக்கிறார்.
கடந்த வியாழக்கிழமை ராஸ் அல் கைமாவின் கெயில் பகுதியில் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்காத 13 வயது சிறுவன் காரை ஓட்டிச்செல்கையில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. காரினுள் 11 வயது சிறுவனும் இருந்திருக்கிறான். 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறான். மற்ற இருவரும் காயங்களோடு உயிர்தப்பியுள்ளனர் என ராஸ் அல் கைமா காவல்துறையின் செயல்பாட்டுத்துறை தலைமை இயக்குனர் பிரிகேடியர் முகமது சயீத் அல் ஹுமைதி தெரிவித்தார்.
வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் செப்பனிடப்படாத பகுதியில் கார் நுழைந்து தடம் புரண்டது. இதுகுறித்து வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு மத்திய செயல்பாட்டுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனேயே ஆம்புலன்ஸ், காவல்துறை ரோந்து அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்துக்குட்பட்ட கார் முழுவதுமாக சேதமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடல் அல் தைத் மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. உரிமம் பெற்றிராத பல இளைஞர்கள் காரை இயக்கியதால் இப்படியான கோர விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். பெற்றோர் தங்களது ஓட்டுனர் உரிமம் பெறாத குழந்தைகளை வாகனங்களை இயக்க அனுமதிக்கவேண்டாம் என ஹுமைதி வலியுறுத்தியிருக்கிறார்.
செய்தி மூலம் - https://gulfnews.com