Ads Area

இருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும்.

இருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும்

- மு.கா .பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்

ஊடகப்பிரிவு

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

எதையும் நிபந்தனையாக குறிப்பிடாமல், எழுமாந்தமாக இருபதை ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் சார்ந்த சில நலன்களை வியூகத்தின் வடிவிலே சாதிக்க வேண்டியுள்ளது.இதனால்தான் இன்று வரைக்கும் மௌனியாகச் செயற்படுகிறோம்.

காலப்போக்கில் சமூகநலன்கள் கை கூடுகையில், எங்களால் பேசப்பட்டவைகள் எவை என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளும். இவ்வேளையில் வீண் விமர்சகர்கள் வாயடைத்து வெட்கிக்கப் போவது உறுதி.

பேரம் பேசும் பலம் இழந்துள்ளதாகக் காட்டப்பட்ட அரசியல் பின்புலங்களிலும் அவ்வாறு பலம் குன்றவில்லை என்பதை நொடிப் பொழுதில் நிரூபித்தவர்கள் நாங்கள். காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் காய்களை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளதை, இவ்விமர்சகர்கள் விளங்காதுள்ளமைதான் எமக்குள்ள கவலை.

தம்பட்டமடிக்காது, தக்க தருணத்தில் அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல், வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை.

கொரோனாவின் சூழலில், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய நம்பிக்கைகள் மீதான கெடுபிடிகளைக் கருத்தில் கொள்ளாமலும்,நாங்கள் இருபதை ஆதரிக்கவும் இல்லை.அல்லாஹ்வின் உதவியால்,எமது வியூகங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe