Ads Area

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பணியாளர்களை தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஆலோசனை.

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரும், இலங்கையர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை பெறமுடியுமா என்பது குறித்து ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி குறித்த பணியாளர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர்களை அழைத்துவரும் பயணிகள் விமானங்களுக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தல், அவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளல் தொடர்பிலும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை பெறமுடியுமா என்பது குறித்தும் ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை வெளிநாட்டில் பணியாற்றும் 32 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன், மேலும் 22 ஆயிரத்து 483 பேர் நாட்டிற்கு வருகைதருவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களின் இடவசதியை கருத்திற்கொண்டு இதுவரை அப்பணியாளர்களுக்கு நாட்டிற்கு வருவதற்கான விமானச்சேவை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe