நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்க்கை மற்றும் இஸ்லாமிய நாகரீகம் தொடர்பான அருங்காட்சியகம் சவூதி அரேபியாவின் புனித மதீனா நகரில் திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவும், சர்வதேசக் காண்காட்சியும் கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்றது.
புனித மதீனா நகரின் ஆளுநரும்,மதீனா பிரதேச அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான இளவரசர் பைஸல் பின் ஸல்மான் அவர்கள் மேற்படி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார்.
சவூதிஅரேபியாவின் 2030ஆம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் ஒரு இலக்கான கலாச்சார சுற்றுலாத்துறையை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் மேற்படி அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம் லீக்கின் கண்காணிப்பின் கீழ் சர்வதேச கண்காட்சியும், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்க்கை மற்றும் இஸ்லாமிய நாகரீகம் தொடர்பான அருங்காட்சியகமும் திறக்கப்பட்டுள்ளது.
மதீனாவின் புனித மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் , இவ் அருங்காட்சியகம் ஒரு நாளின் 24 மணித்தியாலங்களும் திறக்கப்பட்டிருக்கும். நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்க்கை மற்றும் இஸ்லாமிய உலகின் வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அருங்காட்சியமாக இது அமைக்கப்பட்டுள்ளது.