அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும், துக்கமும் அடைகின்றேன் - முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்
அரசியலிலே மிகப் பெரிய பங்கை வகித்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன். என முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அனுதாப அறிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் அனுதாப அறிக்கையில் இலங்கையின் தென்பகுதியில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து மிகவும் நேர்மையாக அரசியலைச் செய்த ஒருவர். குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய வளர்ச்சியிலே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க பங்கு வகித்த ஒருவர். அவரது அமைச்சிலே தபால் தொலைத்தொடர்பு, ஊடகத்துறை பிரதி அமைச்சராக சுமார் 6 வருடங்கள் கடமையாற்றியுள்ளதோடு அவரின் கீழ் நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவராகவும் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் தலைவராகவும் கடமையாற்றி உள்ளேன். மிகவும் இனிமையான சுபாவமும், எச் சந்தர்ப்பத்திலும் இலஞ்சம், ஊழல் போன்றவற்றிற்கு துணை போகாத ஒருவராக செயற்பட்டவர்.
அரசியலில் மிக நேர்மையாக செயற்பட வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பான ஒருவர். அரசியலில் மிக மோசமான, பிழையான நிலமைகள் வருகின்ற போது கட்சிகளை விட்டு வேறு கட்சிக்கு மாறிய ஒருவர்.
முஸ்லீம்களுக்கு எதிராக பேரினவாதிகள் கடுமையான செயற்பாடுகளின் போது அதற்கு எதிராக மாத்தறையிலே முஸ்லீம்களை பாதுகாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்து முஸ்லீம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரு சகோதரர்.
அது மாத்திரமன்றி தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு யுத்த காலத்திலே ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதிலே மிகக் கவனமாக இருந்த ஒருவர். ஐக்கிய நாடுகள் சபையில் கூட சிறுபான்மை இனங்கள் பாதிக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் ஆற்றிய உரையினால் தென் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகிய ஒரு அமைச்சர். சிறு பான்மை இனங்களை அரவணைத்துக் கொண்டே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதிலே மிகவும் கரிசனையான ஒருவர்
1989ம் ஆண்டு என்னோடு பாராளுமன்றத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்து 1994ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் பொதுஜன ஐக்கிய முன்னணி சிறீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய வளர்ச்சியிலே மிகக் கடுமையான பங்களிப்புக்களைச் செய்த ஒருவர். எதிர்காலத்திலே அரசியலில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இரவுபகலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது இவ்வாறான மரணம் ஏற்பட்டிருக்கின்றது. அவரது குடும்பம்,நண்பர்களோடு பழகிய ஒருவன் என்ற அடிப்படையில் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன். இவ்வாறான தலைமைகளை இந்நாடு இக்காலகட்டத்திலே இழந்தது மிகவும் துரதிஷ்டமானது.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தனது அனுதாப அறிக்கையில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.