முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு மூவின இலங்கை மக்களுக்கும் பேரிழப்பாகும் - இரங்கல் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப்.
கொவிட் பெருந்தொற்றினால் இன்று உயிரிழந்த முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான மங்கள சமரவீரவின் மறைவு மிகுந்த சோகத்தை தருவதோடு மெரும்பான்மை சமூகத்திற்கு மட்டுமல்லாது மூவின மக்களுக்கும் அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும் என திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்து நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது இனவாத குரல்கள் மேலோங்கி முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மையினரில் பலர் விரல் சுட்டிய போது தைரியமாக முன்னின்று முஸ்லிம் மக்களுக்காக நியாயமாக குரல் கொடுத்தது மட்டுமல்லாது தான் ஒரு தென்னிலங்கை அரசியல்வாதியாக இருந்தும் நாட்டின் சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக வீதிக்கிறங்கி முஸ்லிம்களின் நியாயத்துவங்களுக்காக குரல் எழுப்பிய பெருந்தகை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என்பதை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது.
தான் அதிகாரத்தில் இருந்தபோதுகளில் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லும் ஒரு மென்போக்கான அரசியல்வாதியாக தன்னை எப்போதும் காட்டிக்கொண்டவர்.
இறுதியாக கூட மூவின மக்களையும் அழைத்ததான அரசியல் பயணத்திற்கான அறைகூவலை தனது அமைப்பினூடாக விடுத்திருந்தார். ஓரினத்தை மையப்படுத்திய அரசியல் நகர்வு நாட்டிற்கு நிரந்தர விடிவைத் தராது என பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்தார்.
பல சந்தர்ப்பங்களில் ஆட்சியை தீர்மானிக்கும் பெரும் இராஜதந்திரியாக விளங்கியவர். தற்போதைய நாட்டின் சூழலில் இனவாத அரவணைப்பை மாற்றியமைத்து ஒரு தேசமாக மூவின மக்களும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான அறைகூவலை விடுத்து தனது அமைப்பை நிறுவி செயற்பட்டுக்கொண்டிருந்த அவரது அந்திம காலத்தில் தான் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
அவரினூடாக நல்லதொரு விடிவு கிட்டும் என்ற நம்பிக்கையில் ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக நானுமிருந்தேன். ஆனால் அவரின் இழப்பு எதிர்பாராததாகிவிட்டது.
தேசத்தின் அரசியல் வரலாற்றில் எல்லா சமூகங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டான அரசியல்வாதியாக திகழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சரின் ஆத்மா சாந்தியடைவதாக!
என பாரளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் தனது இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.