சவூதி அரேபியாவால் விதிக்கப்பட்ட பயண தடையின் காரணமாக சவூதிக்கு திரும்ப முடியாமல் பயணத் தடையை எதிர்கொள்ளும் நாடுகளில் சிக்கி தவிக்கும் சவூதி குடியிருப்பாளர்களில் இருந்து, கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட வெளிநாட்டினரை நாட்டிற்குள் நேரடியாக அனுமதிக்கும் என சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் பயணம் குறித்த புதிய அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து கொரோனா வைரஸுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு, செல்லுபடியாகும் எக்ஸிட் & ரீ என்ட்ரி விசாவில் நாட்டை விட்டு வெளியேறிய வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் சவூதி அரேபியாவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு குறித்து சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சவுதி அரேபியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்தியர்கள் மூன்றாவது நாட்டில் தனிமைப்படுத்தல் தேவையில்லாமல் நேரடியாக நாட்டிற்கு திரும்ப முடியும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
மேலும் இந்த முடிவை செயல்படுத்துவது குறித்த கூடுதல் விவரங்களுக்காக காத்திருப்பதாகவும் சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக விபரம் ஆங்கிலத்தில் - https://saudigazette.com.sa