இன்றைய காலங்களில் பணத்துக்காக நிறைய மோசடிகள் பலராலும் நடந்து கொண்டிருக்கின்றது. அதிகமான சகோதரர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டு நீங்கள் அங்கு சென்றதும் உங்களுக்கான வேலை ஆயத்தமாக இருக்கின்றது வெகுமதியான சம்பளமும் தங்குமிட வசதியும் சாப்பாடும் கிடைக்கும் என்றெல்லாம் ஏமாற்றி மூன்று மாத விசா என்று சொல்லி ஒரு மாத சுற்றுலா விசாவில் அனுப்பிவிடுகின்றார்கள்.
நீங்கள் அங்கு சென்றதன் பின் அனைத்தையும் பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கின்றார்கள் என்றெல்லாம் ஏமாறியவர்கள் இன்று வேலை இல்லாமல் உணவும் இல்லாமல் பூங்காவிலும் வீதிகளிலும் தங்குவதை காணக்கிடைக்கின்றது!
இன்றைய காலங்களில் நேரடியாக வேலைக்கான விசா நாட்டில் இருக்கும்போதே கிடைப்பதென்பது மிகவும் அரிது… தயவு செய்து இனி வருகின்றவர்கள் கீழ் வருகின்ற விடயங்களை கவனத்திற்கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையில் இதனை ஒரு தெளிவூட்டளுக்காக எழுதுகின்றேன்.
1. ஒரு மாத விசாவில் வேலை தேடி வருவதனை தவிர்கவும்.
2. வேலை தேடுவதற்கான மூன்று மாத விசாவினை பெற்றுக்கொள்ளுங்கள்.அதற்கான தற்போதைய கட்டணம் இலங்கை நாணயத்தின்படி ரூபாய் 50,000/- இல் இருந்து 52,000/- ரூபாய் மட்டுமே மேலதிகமாக கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
3. விமான டிக்கட், PCR மற்றும் Rapid PCR Test Report இற்கான கட்டணத்தை பலரின் ஆலோசனையை
பெற்றுக் கொண்டு பதிவை இடுங்கள்.
4. குறைந்தபட்சம் நாணயமாக 2000 திர்ஹம்களை கையில் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
5. இங்கு மாதாந்த செலவு குறைந்த பட்சம் 1000 திர்ஹம்கள் தேவையாக இருக்கின்றது.
6. ஏஜெண்ட்கள் பணம் தாருங்கள் நாங்கள் வேலை எடுத்து தருகிறோம் என்பவர்களை முற்றாக இங்கு தவிர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் கம்பனிகளோடு நேரடியாக முகம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
7. குறைந்தபட்ச மாத சம்பளமாக 2500 திர்ஹம்கள் என்றால் மாத்திரமே இங்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.இந்த 2500 ற்குள் உணவு இல்லாமல் தங்குமிட வசதி கிடைத்தாலோ அல்லது இதற்குள் தங்குமிட வசதியும் உணவும் கிடைக்காமல் இருந்தாலும் தற்போதைய நிலைப்பாட்டுக்கு இது போதுமானதாக இருக்கலாம்.
8. தற்போதைய சூழ்நிலையில் 2500 திர்ஹம்களுக்கு வேலை கிடைப்பதும் மிகவும் கடினம் என்பதை இங்கு உள்ள சகோதரர்களிடம் இருந்து கேட்க கிடைக்கின்றது.
9. நீங்கள் ஏதும் கல்வி சான்றிதழ்கள் வைத்திருந்தால் அதனை UAE Embassy and Sri Lanka Foreign Ministry இல் உறுதிபடுத்திக் கொண்டு வருவதனால் உங்களுக்கான நல்ல வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
10. இங்கு 7 அமீரகங்கள் இருப்பதனால் நீங்கள் தங்கி இருந்து இலகுவாக வேலை தேடிக் கொள்வதற்கான இடமாக துபாய் சிறந்தது என்பதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
11. இங்கு வருவதாயின் தன்நம்பிக்கையோடு மட்டும் வாருங்கள் எவரையும் நம்பி வருவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நாட்டில் தற்போதைய அசாதாரன சூழ்நிலை காரணமாக அதிகமான சகோதரர்கள் ஐக்கிய அமீரகத்துக்குள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.அவர்களுக்கு இந்த பதிவு சென்றடைய உதவி செய்யுங்கள்.