Ads Area

நாபீர் பௌண்டஷன், எதிர்வரும் தேர்தலின் போது அரசியல் கட்சியாக மாறும் : சம்மாந்துறை பிரதேச சபை எங்கள் வசமாகும்.

 நூருல் ஹுதா உமர் 

அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அறிவு ரீதியாக பாரிய பின்னடைவு இருக்கிறது. அதனால் எமது மக்களுக்கு எவ்வாறான அரசியல் தலைமைத்துவங்களை உருவாக்கலாம் என்பது தொடர்பில் நாபீர் பௌண்டஷன் ஊடாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று சமூக அமைப்புக்களை நாடி கலந்துரையாடி தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அதனூடாக அம்பாறை மக்களுக்கு றிசாத், ஹக்கீம், அதாஉல்லா போன்றவர்களினால் எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை என்பதை அறிந்து நாபீர் பௌண்டசனை எதிர்வரும் தேர்தலின் போது அரசியல் கட்சியாக பரிணமிக்கச்செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சம்மாந்துறை ஈ.சி.எம். நிறுவன முகாமைத்துவ பணிப்பாளரும், நாபீர் பௌண்டஷன் தவிசாளருமான பொறியியலாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிர் தெரிவித்தார். 

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசியல் செய்வது, தேர்தல் நடத்துவது எல்லாம் மக்களின் நன்மைக்கே. கடந்த காலங்களில் நாங்கள் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் பல வேலைத்திட்டங்களை மக்களுக்காக செய்து வந்தோம். நாபீர் பௌண்டசனாக இயங்கிவந்த எங்களின் அமைப்பை எதிர்வரும் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியாக மாற்றியமைத்து பொதுத்தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் களமிறங்க தயாராகி வருகிறோம். கூட்டிணைந்தா அல்லது தனித்தா என்பதை காலமே தீர்மானிக்கும். 

தேர்தல்களை மையமாக கொண்டு எங்களின் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மக்களை நேரடியாக சந்தித்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை பற்றி தெளிவூட்டி ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வறுமையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை எப்படி அந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியுமென்று ஆராய்ந்து தொழில்வாய்ப்பில்லா நிலையிலிருந்து உடனடியாக மீட்க இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எதிர்காலத்தில் நிறைவான தொழில்வாய்ப்புக்களை மேற்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். இதனூடாக தேசிய பொருளாதாரத்திலும் உயர்வை கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம். 

எந்த ஒரு பணியையும் இறைவனுக்கு பயந்து உளத்தூய்மையுடன் செய்தால் அதில் வெற்றியுள்ளது. அரசியல் என்றாலும் சரி, என்னுடைய தொழில் என்றாலும் சரி எனக்கிருக்கும் நல்லபெயரை கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை நான் எதிர்காலத்தில் முன்னெடுக்க தயாராக உள்ளேன். கல்முனை மாநகர சபை முதல்வராக நான் இருந்திருந்தால் பல்வேறு அபிவிருத்திகளை நான் செய்திருப்பேன். சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை எதிர்வரும் காலங்களில் கைப்பற்ற தேர்தல்பணிகளை முடுக்கி விட்டுள்ளேன் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe