தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக உச்சத்திலிருந்த காலப்பகுதியிலிருந்து இன்று வரை பல துவிச்சக்கரவண்டிகள் திருட்டுபோயுள்ளதாக பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் மீண்டும் துவிச்சக்கரவண்டி பாவனைக்கு திரும்பியதையடுத்து தற்போது ஒரு துவிச்சக்கரவண்டி 50, 60, 70 ஆயிரம் ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது.
சம்மாந்துறையில் உள்ள துவிச்சக்கர வண்டிகள் விற்பனை செய்யும் கடைகளிலும், துவிச்சக்கர வண்டிகள் திருத்தும் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதையும் ஆங்காங்கே காணக் கூடியதாகவுள்ளது.
துவிச்சக்கரவண்டிகளை பொதுமக்கள் வர்த்தக நிலையங்கள், சந்தை, வங்கிகள் போன்ற பொது இடங்களுக்கு மன்னால் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். அங்கு சென்று தமது தேவையை பூர்தி செய்துவிட்டு திரும்பி வந்து பார்க்கும் போது பூட்டி விடப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளதாக பலர் முறைப்பாடுகள் தெரிவிக்கின்றனர். தனியார் வகுப்புக்களுக்கு பெரும்பாலும் துவிச்சக்கர வண்டிகளில் செல்லும் மாணவர்களில் சிலரது துவிச்சக்கர வண்டிகளும் இவ்வாறு களவு போயுள்ளதாக மாணவர் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளையர்களிடமிருந்து பொதுமக்கள் தமது துவிச்சக்கரவண்டிகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுவதோடு யாராவது துவிச்சக்கர வண்டிகள் விற்பனை செய்ய வரும் போது அவர்களது ஆள் அடையாளங்களை நன்கு அறிந்து வண்டிகளை வாங்கிக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர். காரணம் திருட்டு சைக்கிள்களும் தற்போது விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்மாந்துறையில் பல இடங்களில் பலரின் மோட்டார் சைக்கிள்களிலிருந்து பெற்றோலும் உரிஞ்சி எடுக்கப்பட்டு திருட்டுப் போயுள்ளதாகவும் பலரும் முறைப்பாடுகள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய துவிச்சக்கர வண்டி திருட்டுத் சம்பங்கள், பெற்றோல் திருட்டுச் சம்பங்கள் சம்மாந்து சம்மாந்துறையில் மாத்திரமல்ல பல ஊர்களிலும் நிகழ்ந்து வருகின்றமையினால் பொதுமக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியமாகும்.