Ads Area

நேற்று காரைதீவில் ஹர்த்தால் படுதோல்வி: அனைத்தும் இயல்புநிலையில்.

 ( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் நேற்று வடகிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கு  அம்பாறை மாவட்டம் காரைதீவில் போதுமான ஆதரவில்லை.


அங்கு  கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கின. ஒருசில கடைகளே பூட்டப்பட்டிருந்தன.


அனைத்து பாடசாலைகளும் வழமைபோல் இயங்கின. எனினும் மாணவர்களின் வரவு சற்று குறைந்து காணப்பட்டது.


வீதிப் போக்குவரத்துகளில் பஸ் தொடக்கம் சகல வாகனங்களும்  ஈடுபட்டன.


மொத்தத்தில் காரைதீவு தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இயல்புநிலை காணப்பட்டது.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தும், அதற்கு மாறாக இவ் இயல்புநிலை காணப்பட்டது.


தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பூரண ஆதரவினை  வழங்குவதாக தெரிவிப்பதுடன் இக் குறித்த ஹர்த்தாலுக்கு காரைதீவு பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்கும்படி அழைப்பு விடுத்திருந்தனர்.


முல்லைத்தீவு கரடியனாறு பொலிஸ்பிரிவில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு  காணாமல் போன நிலையில் முத்தையன்கட்டு  குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட  இளைஞரின்  படுகொலை தொடர்பாக நீதி வேண்டியும்,  வடகிழக்கு பகுதியில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற இராணுவ கெடுபிடிகளை கண்டித்தும் ,நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும்  18ம் திகதி இடம்பெறும் பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் பூரண ஆதரவு வழங்குவதுடன்  காரைதீவு பிரதேசமக்கள் மற்றும் வர்த்த சங்கத்தினரும் கடைகள் மற்றும் தொழில்களை மூடுவதன் மூலம் அன்றைய நாளில்  இடம்பெறும் வடகிழக்கு தழுவிய இந்த  ஒற்றுமைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe