குவைத் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நாடுகடத்தல்:உயிரிழந்த தொழிலாளர்கள் உடல்கள் தாயகம் அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குவைத்தில் எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் அவரவர் நாடுகளுக்கு வாழ்நாள் முழுவதும் குவைத்தில் நுழைய முடியாதபடி விரல் அடையாளம் பதிவு செய்த பிறகு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு நாடுகடத்தவும், அதேபோல் இதை தயாரித்த மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த குற்றவாளிகளின் மீது கொலை வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்களுக்கு எந்த மன்னிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல தினசரி அரபு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமான கலப்பட கள்ளச்சாராய விபத்தில் தொடர்புடைய 4 முக்கிய குற்றவாளிகள் உட்பட 71 நபர்கள் கைது செய்யப்பட்டு அரசு பொதுத்துறை வழக்கறிஞரிடம் தொடர் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்ததாக நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது. அதேபோல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்கள் வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது சுமத்தப்பட வேண்டிய பிரிவுகள் தீர்மானிக்கப்படும் மற்றும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் நபர்கள் பலருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து குற்றவாளிகள் உட்பட்ட வலையமைப்பை முழுமையாக நாட்டிலிருந்து அகற்றுவதற்காக கடுமையான சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னரே உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது என்றும், அதேபோல் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான தங்களுடைய பங்கு குறித்து கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே குவைத் சுகாதாரத்துறை கடந்த வியாழக்கிழமை(14/08/25) கடைசியாக வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 23 பேர் வரையில் உயிரிழந்தனர் எனவும், 160 தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சை மற்றும் அவசர சிறுநீரக டயாலிசிஸ் அளிக்கப்பட்டு வருவதாகவும், பலருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோனதாகவும் அறிவித்திருந்தது.
அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் கடந்த புதன்கிழமை(13/08/25) வெளியிட்ட அறிவிப்பில் சுமார் 40 இந்தியர்கள் வரையில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர் எனவும், லேசாக பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வருவதாகவும் அறிவித்திருந்தது, உயிரிழந்த இந்தியர்களில் கேரளா, தமிழகம், ஆந்திரா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் அடங்குவர். ஆனால் சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாகும் என்று நம்பத்தகுந்த மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் சட்ட நடவடிக்கைகளை முடித்து ஊருக்கு அனுப்பும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.