பாறுக் ஷிஹான்.
தமிழின அழிப்பிற்கான சர்வதேச நீதியைக்கோரும் மக்கள் கையெழுத்துப்போராட்டம் மூன்றாவது நாளா நேற்றும் (25) இடம்பெற்றது.
சர்வதேச நீதி கோரும் போராட்டமான “நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE)” எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த சனிக்கிழமை (23 ) வடகிழக்கு, தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை (24) நாவிதன்வெளி பிரதேசத்திலும் திங்கட்கிழமை (25) மூன்றாவது நாள் காரைதீவிலும் முன்னெடுக்கப்பட்டது.
கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளை வழங்கி தமது கையொப்பங்களையும் இட்டதுடன், அங்கு கலந்து கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கி.ஜெயசிறில் தனது கருத்துகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு, பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களிடமும் இக்கையெழுத்துப்போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள்,பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.