இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்ட போது 2021 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநராக இருந்து ஓய்வு பெற்று அவுஸ்திரேலியா சென்று வசித்த கலாநிதி நந்தலால் அவர்களை மீண்டும் நாடு திரும்பி ஆளுநர் பதவியை ஏற்குமாறு அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று நாடுதிரும்பிய அவர் 2022 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி 17 ஆவது மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்றார்.
ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இலங்கை நிதிநிலை வங்குரோத்தில் இருப்பதாக பிரகடனம் செய்யப்பட்டு பல தீவிரமான பொருளாதார சீராக்கல் நடவடிக்கைகளுக்கு வழிகோலுகிறார்.
ஏற்கனவே ஜப்பானின் மத்தியஸ்த உதவியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டை வேண்டி பெப்ரவரி மாதம் அன்றைய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ கடிதம் அனுப்பியிருந்தார், அதற்கு சாதகமான பதிலும் கிடைத்திருந்தது.
குறிப்பிட்ட 2010-2012 காலப்பிரிவில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா பங்கலதேஷ், இலங்கை, பூட்டான் நாடுகளுக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றிய அனுபவத்தில் இலங்கை நெருக்கடி நிலையை துணிச்சலாக கையாண்டார்.
2022 மே மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி கோடாபய ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே தேசியப்பட்டியல் ஆசனத்தில் நாடாளுமன்றம் பிரவேசிதாதிருந்த அவரது வெற்றிடத்திற்கு நியமனம் பெற்ற வஜிர அபேவர்தன மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் அவர்கள் நாட்டை வங்குரோத்து நிலை பிரகடனம் செய்தமையை காரசாரமாக விமர்சிக்க ஆரம்பித்தார், அதற்கு ஆதரவாக எதிர்க்கட்சி ஆர்திக உஸ்தாத்களும் கூக்குரலிட்டனர், ரணில் ஆளுநரை மாற்ற முயற்சித்த போது அதிபர் கோட்டாபய அதனை மறுத்து தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு அவரே ஆளுநராக இருக்க வேண்டும் என ஜூலை மாதம் 4 ஆம் திகதி ஆளுநரை மீள் நியமனம் செய்து வைத்தார்.
பின்னர் 2022 ஜூலை மாதம் 14 ஆம் திகதி கோட்டப்ய பதவி துறந்த போதும் பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற பெரும்பான்மை தயவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் ஆளுநரது நியமனத்தில் கை வைக்க வில்லை, நிதியமைச்சர் அலிசப்ரி, ஆளுநர் கலாநிதி நந்தலால் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த ஸ்ரீவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.
தான் பிரதமராக நியமிக்கப் பட்டால் மேலைத்தேய நாடுகளில் இருந்து பல பில்லியன் டாலர்கள் தாராளமாக உள்வரும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியது போல் எந்தவொரு நாடும் இலங்கைக்கு கை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்ட வெளிநாட்டுச் செலவாணி முகாமை, இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக திறைசேரியின் நிலை சீரடைய ஆரம்பித்தது.
மக்கள் மீதான வாழ்க்கைச் செலவாணி சுமை அதிகரிப்பு, வரிகள் அதிகரிப்பு, சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு என இன்னொரன்ன உள்ளக பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்று அதிகாரங்களை வைத்துக் கொண்டு (வேறு உபாயமின்றி ) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற் கொண்டமை குறிப்பிடத் தக்கது.
சர்வதேச நாணயத்திடம் மண்டியிடாமல் மக்கள்மீது அதிகரித்த சுமைகளை திணிக்காமல் (அரசியல் செல்வாக்கு சரியாமல்) தமது பொருளாதாரக் கொள்கைகளை கையாள முனைந்த ராஜபக்ஷ அரசின் எழுதப்படாத அரசியலுக்கு மாற்றமான அரசியலை ரணில் செய்தமைக்கு காரணம் அவருக்கு கட்டி காப்பதற்கு ஒரு அரசியல் கட்சி இல்லாதிருந்தமையும் தேர்தல்கள் மீது நம்பிக்கை இல்லாது இருந்தமையும் தான்.
அதனால் தான் அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைக் கூட நடாத்த நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
கொவிட் 19 இற்கு பின்னரான இயல்பான சுற்றுலாத்துறை வளர்ச்சி, வெளிநாட்டில் தொழில் புரிவோரது வைப்பீடுகள், ஏற்றுமதிக்கான துறையில் ஏற்பட்டுள்ள இயல்பான முன்னேற்றங்கள் என பல காரணிகளும் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய கையிருப்பை அதிகரிக்கச் செய்தன.
நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதி என்ற வகையிலும் அனுபவமிக்க அரசியல் வாதி என்ற வகையிலும் ராஜபக்ஷ குடும்ப நிழலில் ரணில் விக்கிரமசிங்கவின் வகிபாகம் நேரிடையானதும் எதிர்மறையானதுமான சாதக பாதகங்களை கொண்ட ஒரு பதவிக் காலமாகும் மாறாக நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட கதா நாயகன் என்பதெல்லாம் கலரி அரசியல் கோஷங்களாகும்.
நியாயமான மக்கள் எழுச்சியை முடக்கியமை, கடந்த கால இராஜபோக விரயங்கள், ஊழல் மோசடிகள், கடத்தல்கள், படுகொலைகள் நிறைந்த ஆட்சியாளர்களை காப்பாற்றியமை போன்ற பல விடயங்கள் பேசப்பட வேண்டியவை.
1994 ஆம் ஆண்டு தான் ஐதேக தலைவராக பதவியேற்றது முதல் உட்கட்சி ஜனநாயத்தை குழி தோண்டிப் புதைத்து கட்சியை சின்னாமாக்கி தொடராக 25 தேர்தல்களில் ஐதேக வை தோல்வியில் இட்டுச் சென்று இன்று நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பிர் தானும் இல்லா நிலையை ஏற்படுத்திய சாதனை வீரர் இன்று ஜனநாயகத்தை காப்பாற்ற அணிதிரளுமாறு உள்ளிருந்து அழைப்பு விடுப்பது வேடிக்கை தான்!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
25.08.2025.