தற்போதைய சூழ் நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி தேவைகள் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ள அனர்த்த அவசரகால ஆயத்தக் கூட்டம் நேற்று (09) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா தலைமையில் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு அனர்த்தம் தொடர்பாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன் ,வெள்ள அனர்த்தம் கூடுதலாக ஏற்படுமாக இருந்தால் அதற்குரிய உடனடி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வது பற்றியும்,நிவாரண ஏற்பாடுகள் பற்றியும்,தற்காலிக இடைத்தங்கள் முகாம்கள் அமைப்பது தொடர்பாகவும் இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் வி.வாஸீத் அஹமட், சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல் கஜன்,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும்,அமைப்பாளருமான வை.பி.எம் நவாஸ்,அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ் அஸாருதீன்,திணைக்களங்களின் பிரதிநிதிகள் உட்பட சமூக வலூட்டல் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




